You are currently browsing the category archive for the ‘சலட்’ category.

குளர்மையுடையது எனப் போற்றப்படும் இது இடைவெப்ப வலயத்திற்குரிய மரம். Lythraceae குடும்பத்தைச் சார்ந்தது.

 • ஈரான் ஆப்கனிஸ்தான் நாடுகளைத் தாயகமாகக் கொண்டது. 
 • எகிப்து இஸ்ரேலில் காட்டுச் செடியாக வளர்ந்தது. 
 • பின் மத்தியதரைக் கடல் நாடுகளுக்கு பரவியது என்கிறார்கள். 
 • இமாலயா பகுதியில் இருந்ததாகவும் சொல்லப்படுகின்றது.

எங்கள் தோட்டத்தில் பூவாக காயாக பழமுமாக

மாதுளை, மாதுளங்கம், என்ற பெயர்களில் அழைப்பார்கள். தாவரவியல் பெயர் Punica Granatum. இதில் புளிப்பு, துவர்ப்பு, இனிப்பு என மூன்று வகைகள் உள்ளன. இதை “சூப்பர் புருட் ” (Super fruit ) என்றும் அழைக்கின்றார்கள்.

வீட்டுத் தோட்டங்களிலும் சிறிய இனங்களை பெரிய சாடிகளிலும் பயிரிட்டுக்கொள்ளலாம். இம் மரத்தின் பூ, பட்டை, வேர் என அனைத்தும் மருத்துவ குணமுடையது என்கிறார்கள்.

சிறிய மரம் 8 மீற்றர் உயரம் வரை வளரும். 100- 150 பழங்கள் வரை கொடுக்கும். நல்ல வடிகால் கொண்ட வண்டல் மண் மாதுளம் செடி வளர்வதற்கு ஏற்றது.

பொதுவாக மழைக்கால டிசம்பரில் வெட்டிவிட்டால் பெப்ரவரி மார்ச்சில் பூத்து யூன் ஆகஸ்டில் பழம் கிடைக்கும் என்கிறார்கள்.

வரிசைக்கு வரிசை நாலு மீற்றரும் செடிக்கு செடி 2 மீற்றரும் இருக்குமாறு மாதுளை நடவு செய்வது சிறந்தது என்கிறார்கள்.

மாதுளம் பயிர்ச் செய்கை

கறுத்தத் தோலுடைய மாதுளம் பழம் பார்த்திருக்கிறீர்களா, Saveth இனம். கறுத்த இனத்திற்குள் இருப்பதும் சிவத்த முத்துக்கள்தான்.

சித்த ஆயுள்வேத மருத்துவங்களில்

சித்த ஆயுள் வேத மருத்துவ முறைகளில் இதற்கு மிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

 • இரத்த விருத்திக்கு நல்லது 
 • இதயத்திற்கும் மூளைக்கும் சக்தியைத் தரவல்லது. 
 • குடற்புண்களைக் குணப்படுத்துகிறது. 
 • நோயினால் பாதிப்படைந்தவர்கள் உடல் தேறவும் பலம் பெறவும் இப்பழம் பெரிதும் உதவும்.

மேலும்…..

 • பித்தத்தைத் தவிர்க்கும். 
 • மலட்டுத்தன்மையை நீக்கும். 
 • உடற்சூட்டைத் தணிக்கும். 
 • மாதுளம் சாற்றுடன் தேன் கலந்து பருக வாந்தி நிற்கும் 
 • மாதுளம் பழம் விதையுடன் இருப்பதால் மலச்சிக்கலைப் போக்கும். 

என ஆயுள்வேத சித்த வைத்தியங்களில் சொல்லப்படுகிறது.

முத்தனைய மாதுள முத்துக்கள்

உணவுவகைகள்

தாகத்தைத் தணிக்கும். என்பதால் கோடையில் சாப்பிடச் சிறந்தது. ஜீசாகவும் மில்க் ஜேக், சர்பத், மாதுளை லசி, மாதுளம் சாதம், மாதுளம் சலட், புருட் சலட், பஞ்சாமிர்தம், எனத் தயாரித்து உட்கொள்ளலாம்.

புடிங் வகைகளில் கலக்கலாம்.

வாட்டிய இறைச்சி வகைகளிலும் சலட்இலைகளுடன் கலக்கின்றார்கள்.

பேசியன் சூப்பில் போடுகின்றார்கள்.

மாதுளம் பானமாகவும் விற்கப்படுகிறது.

ஆர்மேனியாவில் வைன் தயாரிக்கிறார்கள்.

கலிபோர்ணியா, அரிசோனாவிலும்  ஜீஸ் தயாரிக்கப் பயிரிடுகின்றார்கள்.

இந்தியாவில் மஹாராஸ்ரா குஷராத் மாநிலங்களில் அதிகளவில் பயிராகிறது.

விஞ்ஞான ஆய்வுகளில்

மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் தன்மை இப் பழத்திற்கு உண்டு என்கிறார்கள் ஆராச்சியாளர்கள். இப்பழத்தில் Phytochemical உள்ளது. எலஜிக் அமிலம் என அழைக்கபடும் இது புற்றுநோய் கலங்களைக் கட்டுப்படுத்த உதவும் என்கிறார்கள். இது ஆய்வக முடிவுதான். இன்னமும் மனிதர்களில் பரீட்சித்துப் பாரக்கவில்லை.

மாதுளம் பிஞ்சு என் அக்கா கையில்

மேலும் சுவாசப்பை புற்று நோய், புரஸ்ரேட் புற்று நோய், ஆகியவை தோன்றுவதற்கான சாத்தித்தைக் குறைக்கும் என எலிகளில் செய்யபட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Pomegranate Health Benefits வீடியோவில் பார்க்க

அல்சிமர் நோய் தீவிரமடைவதைத் தாமதமாக்கும் என எலிகளில் செய்யப்பட்ட மற்றொரு ஆய்வு தெரிவித்தது.

 எலும்புத் தேய்வு நோயான ஒஸ்டியோ ஆரத்திரைடிஸ் நோயில் குருத்தெலும்பு தேய்வதைக் குறைக்கக் கூடும் என மற்றொரு ஆய்வு தெரிவித்தது.

தினமும் 1.7 அவுன்ஸ் மாதுளம் சாறு குடித்தால் உயர் இரத்த அழுத்தமானது 5 சதவிகிதத்தால் குறையும் என ஒரு ஆய்வு கூறியது.

அதேபோல பற்களுக்கும் முரசுகளுக்கும் இடையே காரை படிவது dental plaque குறையலாம் எனவும் வேறொரு ஆய்வு கூறியது.

இத்தகைய ஆய்வுகளும் பெரும்பாலும் மாதுளை உற்பத்தியாளர்களின் அனுசரணையுடன் செய்யப்பட்டதால் நம்பகத்தன்மை குறைவு என்கிறார்கள்.

இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை இவற்றின் நன்மையை உறுதிப்படுத்தவில்லை. மேலும் ஆண்மைக் குறைப்பாடு பற்றி செய்திகளுக்கு உதவுவது பற்றி ஆதாரம் இல்லை என்கிறது.

படிக்க  Evidence from pomegranate study not firm

 

இதில் உள்ள போஷணைப் பொருட்கள் என்ன? எவ்வளவு இருக்கின்றன? அமெரிக்காவின் USDA தரும் தகவல்கள் கீழே உள்ளன

 
Pomegranate, arils only
Nutritional value per 100 g (3.5 oz)
Energy 346 kJ (83 kcal)
Carbohydrates 18.7 g
Sugars 13.7 g
Dietary fiber 4.0 g
Fat 1.2 g
Protein 1.7 g
Thiamine (vit. B1) 0.07 mg (6%)
Riboflavin (vit. B2) 0.05 mg (4%)
Niacin (vit. B3) 0.29 mg (2%)
Pantothenic acid (B5) 0.38 mg (8%)
Vitamin B6 0.08 mg (6%)
Folate (vit. B9) 38 μg (10%)
Vitamin C 10 mg (12%)
Calcium 10 mg (1%)
Iron 0.30 mg (2%)
Magnesium 12 mg (3%)
Phosphorus 36 mg (5%)
Potassium 236 mg (5%)
Zinc 0.35 mg (4%)
Percentages are relative to
US recommendations for adults.
Source: USDA Nutrient Database

குறைந்தளவு கலோரிச் சத்தும் கொழுப்பும்  இருப்பதால் உடலுக்கு தீமையளிக்காது.  சிறிதளவாவது நன்மையளிக்கும் என நம்பலாம். அழகிய பழமாகவும் கவர்வதால் விரும்பி  உண்ணப் படுகின்றது. சுவையாகவும் இருக்கின்றதல்லவா அதனால் உண்பது நல்லதே.

சலட் செய்ய

தேவையானவை 

மாதுளம் பழம் – 1
தயிர் – 1 கப்
கப்பல் வாழைப்பழம் –  2
சீனி –  1 ரீ ஸ்பூன்
உப்பு சிறிதளவு

தயாரிக்க

 • தயிரை நன்கு அடித்து சீனி, உப்பு கலந்துவிடுங்கள். 
 • பழங்களைக் கழுவி தோல் நீ்க்கி எடுங்கள்.
 • வாழைப்பழத்தை 1/2 அங்குல வட்டமாக வெட்டி அடித்து வைத்த தயிரில் கலவுங்கள்.
 • மாதுளை முத்துக்களை உடைத்து எடுத்து கலந்துவிடுங்கள்.
 • குளிரூட்டியில் வையுங்கள்.
 • கண்ணுக்கு கலர்புல்லாக இருக்கும். நாவுக்கு குளிர்ச்சியான சலட்.

தனியாகவும் சாப்பிடலாம்.

சாதத்துடன் கலந்து சாப்பிட கோடை வெப்பத்திற்கு குளிர்ச்சி தரும்.

கோடைக்கு ஏற்ற குளிர்ச்சியான சலட் பற்றிய முன்னைய பதிவுகள்

 1. ஜில்லென்று ஒரு சலட்
 2. வெஜிட்டபிள் அன்ட் புருட் சலட்

-: மாதேவி :-

Advertisements

>அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகாணத்தில் அக்ரிலை ஆய்வு நிறுவனம் செய்த ஒரு ஆய்வானது பிளம், பீச் பழங்களில் புற்றுநொயைத் தடுக்கும் மருத்துவ குணம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

பினோலிக் அமிலத்தின் கூட்டுப் பொருட்களான குளொரோஜெனிக் மற்றும் நியோ குளேராஜெனிக் அமிலம் போன்ற இராசாயனங்கள்தான் புற்றுநோய் அணுக்களை அழிக்கிறது. இந்த இராசாயனங்கள் பழவகைகள் யாவற்றிலும் காணப்படுகின்றன. இருந்தாலும் பிளம்பழத்தில் கூடுதலாக இருக்கிறது என்கிறார்கள்.

எமது நாட்டில் பயிரிடப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. கொம்பிலக்ஸ்களில் விற்பனையாகின்றன.

மென்மையான வட்டமான வழவழப்பான தோலையுடைய சதைப்பிடிப்பான இனிய பழம் இது.

மஞ்சள், வெள்ளை பச்சை, சிகப்பு,ஊதா கலர்களில் இருக்கும்.

பச்சை நிறத்தை அண்டிய வெள்ளைப் பூக்கள் மலர்ந்திருக்கும்.

தேனீக்கள் தேன் உண்ண முயலுகையில் மகரந்தச் சேர்க்கை நடக்கிறது.

Autum காலத்தில் இலைகளை உதிர்த்து Early Spring ல் பூக்களைக் கொடுக்கும்.

பெரிய பழம் 3-6 செ.மீ அளவிருக்கும்.

முற்றிய பழத்தின் மேலே வெள்ளை படர்ந்தது போல இருக்கும்.

மரம் 5-7 மீற்றர் உயரம் வரை வளரக் கூடியது. ரோசேசியே குடும்பத்தைச் சேர்ந்தது. அறிவியல்பெயர் பிருனஸ்சலிசினா.

உலரவைத்த பிளம்ஸ் ப்ருனே Prunes என அழைக்கப்படும்.

வடஅமெரிக்க, ஐரோப்பா, சீனா ஆகிய இடங்களில் இயற்கையில் காணப்பட்டது. ரோமானியர்கள் வடக்கு ஐரொப்பாவில் அறிமுகப்படுத்தினர்.

இதில் பெரும்பாலும் நான்கு வகை இருக்கிறது.

 1. யூரோப்பியன் பிளம், 
 2. ஜப்பானிய பிளம், 
 3. Damsons and mirabeels
 4. Cherry plums.

ஐரோப்பிய இனத்தை விட ஜப்பானிய இனப் பிளம் பெரியதாக இருக்கும்.

“பழம் வாங்கலையோ பழம்..” என இடுப்பில் கடகம் ஏந்தி,
கூவியழைத்து பழ விற்பனைக்கு வந்தாள் சின்னு.
சின்னப் பெண்ணாக இருக்கையில் ….

போட்டியில் பரிசுபெற்ற சின்னுவை, அவளின் வெற்றியின் ரகசியம் என்ன என வினவுகின்றனர்.

பழக்காரியாக சின்னு

ஜப்பானிய பிளம், சைனீஸ் பிளம் என்றே அழைக்கப்பட வேண்டும். ஏனெனில் ஜப்பான் 200-300 வருடங்களுக்கு முன்பிருந்தே சைனாவில் இருந்து இறக்குமதி செய்தது. சைனா 1000 வருடங்களாகவே பயிரிட்டு வந்திருக்கிறது. ஜப்பான் உலக நாடுகளுக்குப் பரப்பியதால் ஜப்பானிய பிளம் எனப் பெயர் வந்தது. ஜப்பானிய பிளம் ஏற்றுமதியில் கலிபோனியா பிரபல்யமான இடத்தை வகிக்கிறது.

நேரடியாக பழத்தை உண்பதுடன் கான்களில் கிடைக்கும். யூஸ், ஜாம், சிரப் தயாரித்துக் கொள்வார்கள்.

பிளம் யூசிலிருந்து பிளம் வைன், பிரண்டி தயாராகும்.

ஆசியாவில் ‘பிக்கிள்ட் பிளம்’ ஒரு வகையாகத் தயாரிக்கப்படுகிறது.

சலட்டாக தயாரித்தும் உண்ணலாம். 

காபோஹைதிரேட் கூடுதலாக உள்ளது. குறைந்தளவு கொழுப்பு உள்ளது.
எடை குறைப்பிற்கு ஏற்ற  உணவு.
விற்றமின் சீ அதிகஅளவில் இருப்பதால் தடிமன் சளியை அண்டவிடாமல் தடுக்கும் என்கிறார்கள்.
நார்சத்தும் அதிக அளவில் இருக்கிறது.

100 கிராமில் உள்ள போசனை

காபோஹைதிரேட் 13.1 கிராம்,
கொழுப்பு 0.62 கிராம்,
Fiber  2.2 கிராம்.
நீர்ப்பிடிப்பு 84 சதவிகிதம்,  
Energy 55 kcal,
புரொட்டின் 0.8 கிராம்.
விற்றமின் சீ 5 மிகி
B1 0.02 மிகி.
B2 0.3 மிகி.
B6 0.10 மிகி.

Vitamin E 0.7>  
Vitamin A 18 ug ,  
Potassium- K 172mg,  
Calcium-ca 4 mg.   

பிளம் சலட் செய்துகொள்வோமா.

தேவையான பொருட்கள்

 • பிளம் பழம் – 2
 • பச்சை ஆப்பிள் – ½
 • கிறேப்ஸ் விதையில்லாதது – 5-6
 • துளசி இலை – 6-7
 • தேன் – 2 டேபிள் ஸ்பூன்
 • லெமன் ஜீஸ் – 1 டேபிள் ஸ்பூன்
 • சோல்ட், பெப்பர்பவுடர் – சிறிதளவு

செய்முறை

பழங்கள், துளசி இலைகளைக் கழுவி எடுங்கள.;

பிளம்,ஆப்பிளை மெல்லிய நீள் துண்டுகளாக வெட்டி எடுங்கள்.கிரேப்ஸ் முழுதாகப் போட்டுக்கோள்ளலாம்.

துளசி இலைகளை மிகவும் சிறியதாக வெட்டிக் கொள்ளுங்கள்.

லெமென் சாற்றுடன், உப்பு. பெப்பர் பவுடர், தேன் கலந்து கலக்கிக் கொள்ளுங்கள்.

ஒரு போலில் பழங்களைப் போடுங்கள்.  கலந்து எடுத்த சாற்றை மேலே ஊற்றி பிரட்டிவிடுங்கள்.

வெட்டி எடுத்த துளசி இலையை  தூவி விடுங்கள்.

புதிய சுவையில் சலட் தயாராகிவிட்டது. ஹெல்த்துக்கும் உகந்ததாகும்.

 பழங்கள் பற்றிய எனது ஏனைய பதிவுகளுக்கு

பயன் தரும் பழங்கள் 2

மாதேவி

>
ஒரு முறை பைவ் ஸ்டார் ஹோட்டலில் உணவருந்தும்போது சலட் ஒன்று பரிமாறினார்கள். பிரியாணியுடன் சாப்பிடும்போது மிகுந்த சுவையைத் தந்தது. என்ன முறையில் தயாரித்து இருந்தார்கள் என்பது எனக்குத் தெரியாது.

அதே போன்று தயாரித்துப் பார்த்தால் என்ன எனத் தோன்றியதில் நான் தயாரித்த இலகுவான சலட் முறை இது. ஆனால் சுவையில் பைப் ஸ்டார் தயாரிப்புக்கு குறைந்ததல்ல.

கத்தரிக்காய், அன்னாசி, பச்சைமிளகாய், வெங்காயம், கலந்து செய்து கொண்டேன். கத்தரிக்காய், அன்னாசி அலர்ஜி உள்ளவர்களுக்கு இது ஏற்றதாக இருக்காது.

கத்தரிக்காயை பல வழிகளில் சமைக்கலாம். சட்னி, குழம்பு, பால்கறி, பொரியல், கூட்டு, அச்சாறு, தொக்கு, எண்ணெய்க் கத்தரிக்கறி, கத்தரிக்காய் சாதம் எனத் தொடரும்.

கத்தரி

பிரிஞ்சால் எக் பிளான்ட் (Brinjal, Eggplant) என அழைக்கப்படும். நிறைந்த பொட்டாசியத்தையும் நார்ச் சத்தையும், நிறைந்த நீரையும் கொண்டது. கலோரி குறைந்த உணவாகும்.

100 கிராமில்
காபோஹைட்ரேட் 17.8கி, நார்ப்பொருள் 4.9 கி, கலோரி 24, புரதம் 1.2கி, பொட்டாசியம் 618 மிகி, கல்சியம் 15மி.கி, கொழுப்பு 0.2 மி;கி, விட்டமின் சீ 5 மி.கி, இரும்பு 0.4 மிகி,

Solnaceae குடும்பத்தைச் சேர்ந்தது. தாவரவியல் பெயர் Solanun melangena ஆகும். கத்தரியில் பல இனங்கள் உண்டு.


இதன் பூர்வீகம் எமது பிரதேசங்கள் எனப் பெருமை கொள்ளலாம். இந்தியா, நேபாளம், பங்காள தேசம், பாகிஸ்தான், இலங்கை என்கிறார்கள்.

அன்னாசி

அன்னாசி பழவகைகளில் வாழைப் பழத்திற்கு அடுத்த இடத்தை வகிக்கிறது. அனானஸ், பினா எனவும் அழைக்கப்படும் இதன் தாவரவியல் பெயர் Ananus Comosus.


பூர்வீகம் பிரேஸில் ஆகும். 1943 ல் கொலம்பஸ் Guadaloupe தீவிலிருந்து ஸ்பெயின் தேசத்திற்கு எடுத்துச் சென்றார். அதன் சுவை பிடிபட்டதும் அது உலகெங்கும் பரவிவிட்டது.

100கிராமில்
கலோரி 46, கல்சியம் 18மி.கி, கரோட்டின் 54 மைக்கிறோ கிராம்,
விற்றமின் சீ 40மி.கி, இரும்பு 0.5மி.கி, கொழுப்பு 0.2 கிராம், புரதம் 0.5 கிராம்,

தேவையானவை


கத்தரிக்காய் – 2
அன்னாசித் துண்டுகள் – 1 கப்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 1
தேசிச்சாறு – 1 ரீ ஸ்பூன்
சீனி – ½ ரீ ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
மிளகாய்ப் பொடி – ¼ ரீ ஸ்பூன்
மஞ்சள் பொடி -¼ ரீ ஸ்பூன்
தனியாப் பொடி – ¼ ரீ ஸ்பூன்
ஓயில் – 2-4 டேபிள் ஸ்பூன்

செய்முறை


கத்தரியை 2 அங்குல நீளம், ½ அங்குல அகலத் துண்டுகளாக வெட்டி எடுங்கள்.

உப்பு, மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, தனியாப் பொடி கலந்து ஓயிலில் பிறவுன் நிறம் வரும்வரை பொரித்து எடுங்கள்.

ரிசூ பேப்பரில் போட்டு ஓயிலை வடிய விடுங்கள்.

வெங்காயத்தை மெல்லிய நீள் துண்டுகளாக வெட்டி எடுங்கள்.

மிளகாயை மெல்லிய நீள் துண்டுகளாக வெட்டி எடுங்கள்.

தேசிச்சாறில், உப்பு, சீனி கலந்து கரைத்து வையுங்கள். சலட் போலில் பொரித்த கத்தரிக்காய், அன்னாசித் துண்டுகள், வெங்காயம், மிளகாய், கலந்துவிடுங்கள்.

எலுமிச்சம் சாறை ஊற்றி முள்ளுக் கரண்டியால் கலந்து பரிமாறுங்கள்.

அன்னாசி, கத்தரிக்காய் பொரித்த வாசத்துடன் சலட் சுவை கொடுக்கும்.

(பிரியாணி, சாதம், புட்டு, தோசைக்கும் சுவை தரும்.)

மாதேவிஅனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்.

சலட் வகைகளின் போஷாக்கு முக்கியத்துவம் பற்றி தற்பொழுது அனைவரும் நன்கு அறிந்துள்ளார்கள். சலட் இல்லாத விருந்தும் இல்லை.

இது கிறிஸ்மஸ்ட் புதுவருட பண்டிகைக் காலமாகையால் இச் சலட்டைத் தயாரித்துள்ளேன்.

பிரிஜ்சில் இருந்த பொருட்களை வைத்து அவசரமாகத் தயாரித்ததில் பூரணமாகப் பூர்த்திசெய்ய முடியவில்லை.

நீங்கள் உங்களுடைய திறமைகளைப் பயன்படுத்தி இன்னும் அழகாக்கிக் கொள்ளுங்களேன்.

பச்சையாக உண்ணக்கூடிய மரக்கறிகள், அவித்தெடுத்த மரக்கறிகள், பழவகைகளில் செய்துகொள்ளலாம். சாப்பிடுவதற்கு சற்று முன்பாக செய்துகொள்ளுங்கள்.

உங்களுக்கு விரும்பிய மரக்கறி அல்லது மாமிச ஸ்ரப் (Stuff) இரண்டு தயாரித்து வையுங்கள்.

லெட்யூஸ் சலட் இலைகளை தயாரிக்கும் பிளேட்டில் அலங்காரமாக அடுக்கி வையுங்கள்.

வெள்ளரிக்காயின் தோலைச் சீவிவிட்டு விரும்பிய உயரத்தில் வெட்டி எடுங்கள்.

உள்ளிருக்கும் சதைப்பகுதியை கூரிய கத்தியால் வெளியே எடுத்து விட்டு தயாரித்த ஒரு ஸ்ரப்பை நிரப்பி வையுங்கள்.

மேலேஅவித்தெடுத்த கரட்டின் நுனிப்பகுதியை ருத் பிக்கில் குத்தி திரி போல் தோற்றமளிக்கும்படி வெள்ளரி மேல் குத்திவிடுங்கள்.

நன்கு நேராக நிமிர்த்தி வைக்கக் கூடிய கரட்டை அவித்து எடுத்துக் கொள்ளுங்கள்.கரட்டின் பக்கப் பாட்டில் மெழுகு உருகி வழிந்திருப்பது போன்று மெல்லியதாக நீளமாக வெட்டிய கோவாவை தொங்க விட்டுக் கொள்ளுங்கள்.

இதற்கு நீங்கள் விரும்பினால் அவித்த நூடில்ஸ், முளைக்க வைத்த பாசிப்பயறு அல்லது சீஸ் துருவல் (கொழுப்பு) பயன் படுத்திக் கொள்ளலாம். அடித்தெடுத்த கிழங்குக் கிறீம், பிரெஸ்கிறீம், மயோனிஸ், யோக்கட், தயிர் என்பனவும் பயன்படுத்தலாம்.தக்காளியைப் பாதியாக கிண்ணம் போல் வெட்டிவிட்டு, உள்ளிருக்கும் சதைப்பகுதியை கூரிய கத்தியால் வெளியே எடுத்து விடுங்கள். தயாரித்த இரண்டாவது ஸ்ரப்பை (Stuff) நிரப்பி வையுங்கள். மேலே பழுத்த சிவப்பு அல்லது பச்சை மிளகாய் குத்திவிடுங்கள். விரும்பினால் அடியில் மெழுகு வடிந்தது போல் வைக்கலாம்.

சலட்டின் சென்ரர் பகுதியில் வெங்காயத்தைப் பூ போன்று வெட்டி வைத்து மேலே செறி வைக்கலாம்.

உங்கள் கலை நயத்திற் கேற்ப அழகாகத் தயாரித்துக் கொள்ளுங்களேன்.

ஸ்ரிம் வெண்டக்காய், அவித்த சோளமொத்தி, அவித்த முட்டை, கப்சிகம் மூன்று வர்ணங்களில், கரும்பு, பேபிகோன், பேபிகரட், முள்ளங்கி, தேங்காயின் உள்ளிருக்கும் முளைத்த பூ என இன்னும்…… இன்னும் ..பழங்களில் ஸ்ரோபெரி, பியஸ், அப்பிள், ஆரெஞ், தர்பூசனி, அன்னாசி, பப்பாளி, ஜம்பு, ஏன்…..

எங்கள் ஊர் வாழைப்பழம் கூட…. கறுக்குமா ?

தோலுடன் அடியையும் நுனியையும் வெட்டிவிட்டு தயிர் அல்லது எலுமிச்சம் சாறு தடவி விட்டால் சரி என்கிறீர்களா?

உங்கள் கைவண்ணங்களில் ரெடியாகிவிடும் மெழுகுதிரி சலட்டுக்களாக.

வாண்டுகளும் கூடி உதவிசெய்வார்கள். ஐடியாக்களும் கொடுப்பார்கள். விரும்பி எடுத்தும் உண்பார்கள்.

புத்தாண்டில் அனைவரும் நலமுடன் வாழ வாழ்த்தும்

மாதேவி.

>ஆதிமனிதன் தோன்றிய காலத்தில் உணவைத் தேடி அலைந்து திரிந்தான். பழங்கள், கிழங்குகள், விதைகள் என்பவற்றை நேரடியாக உண்ணத் தொடங்கினான்.

பின்பு இறைச்சி வகைகளை தீயில் வாட்டி, சுவை சேர்க்க உப்பிட்டு தேனிட்டு, பிற்காலத்தில் காரம் சேர்த்து, அதன் பின் வாசனை ஊட்டி என உணவு தயாரிக்கும் முறைகளில் காலம் தோறும் மாற்றங்கள் பல ஆண்டுகளாக ஏற்பட்டு வந்திருக்கிறது என்பதை நாங்கள் எல்லோரும் வரலாறுகள் மூலம் அறிந்திருக்கிறோம்.

இவ்வழிமுறைகளில் கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள், குளிர்காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள் என வெட்ப தட்ப நிலைக்கு ஏற்ப பிரித்து உண்பதால் உடல் ஆரோக்கியமும் கிடைக்கும். நோய்களின்றும் காப்பாற்றிக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளார்கள்.

இவற்றில் வெட்ப காலங்களில் பழங்கள், தயிர், பால்,மோர், இளநீர் கூழ், கஞ்சி கீரைவகைகள், வெண்டி, தக்காளி, வெங்காயம் நீர்த்தன்மையுடைய காய்வகைகளான வெள்ளரி, சவ்சவ், பீர்க்கு, நீத்துக்காய், சுரைக்காய், புடலங்காய், முள்ளங்கி போன்றன குளிர்ச்சியைத் தரும், வெப்பத்தைத் தணிக்கும் உணவுகளாக இருந்து வருகின்றன.

வெயில் வெப்பதால் உடலிலிருந்து வியர்வை வெளியேறுவதால் தண்ணீர்த் தாகம் அதிகரிக்கும். அதற்கு ஈடுகொடுக்க நீர்த்தன்மையுள்ள உணவுகளை உண்பது தாகத்தைத் தணிக்கும். அத்துடன் குளிர்ச்சியை வெப்ப காலத்தில் எமது நா விரும்புவதாலேயே கோடையில் மண்பானைத் தண்ணீர், ஜில்ஜில் ஜீஸ், ஐஸ்கிறீம் என ஓடுகிறோம்.

இவ்வகையில் கோடைக்கு ஏற்ற ஜில்லென்று ஒரு சலட்தான் தர்ப்பூசணி.

குழந்தைகளைக் கவரும் விதமாகவும் விரும்பி உண்ணும் விதமாகவும். வெட்டி அலங்கரித்துக் கொள்வோம் வருகிறீர்களா? செய்வோம்.


தேவையானவை
தர்ப்பூசணி – 1 பழம்
பச்சை அப்பிள் – 1
சலட் இலைகள் – 5
சர்க்கரை – ½ ரீ ஸ்பூன்
லெமன் ஜீஸ் – 1 ரீ ஸ்பூன்
கறுவாப்பொடி சிறிதளவு
மிளகுதூள், உப்பு தேவையான அளவு

தயாரிப்போம்

தர்ப்பூசணியை குறுக்கு வாட்டில் வெட்டி வெளிக்கோப்பை சிதையாதவாறு உள்ளிருக்கும் பழச்சதையை வெட்டி எடுங்கள்.

விதையை நீக்கி சிறுசிறு துண்டுகளாக வெட்டி வையுங்கள்.


அப்பிளை தோலுடன் சிறு துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள்.

தர்ப்பூசணி தோலுடன் மூடிய கோப்பையை உப்பு நீரில் அலசி எடுங்கள்.

சேர்விங் பிளேட்டில் கழுவிய சலட் இலைகளை அடுக்கி அதன்மேல் தர்ப்பூசணி கோப்பையை வையுங்கள்.

வெட்டிய தர்ப்பூசணி துண்டுகளுடன் அப்பிளை கலந்து மிளகு தூள் கறுவாப்பொடி தூவி எடுத்து தர்ப்பூசணி கோப்பையில் வையுங்கள். (விரும்பினால் பிரிட்ஸில் வைத்து எடுக்கலாம்.)

பரிமாறும் பொழுது உப்பு, சர்க்கரை, லெமன் ஜீஸ் கலந்து விடுங்கள்.

கண்ணைக் கவரும் சிவப்பு நிறத்துடன் இனிப்பு, நீர்த்தன்மை சுவை சேர்ந்த சலட் தயாராகிவிட்டது.

ஹெல்த்துக்கும் ஏற்றதுதானே.

குறிப்பு

உப்பு, சர்க்கரை. லெமன் முதலே கலந்து வைத்தால் நீர்த்தன்மை கூடிவிடும் என்பதால் உடனே சேர்ப்பதுதான் நன்று.

மாதேவி

>கப்ஸிகம் என அழைக்கப்படும் இது மிளகாய் குடும்பத்தைச் சேர்ந்தது. இதில் விட்டமின் சி அடங்கியுள்ளது. விட்டமின் ஏ யைக் கொடுக்கும் கரோட்டினும் அதிகம் உண்டு.

பொதுவாக மிளகாய் இனத்தில் காரவகை, காரம் குறைந்த ஸ்வீட் பெப்பர் என இவற்றின் சுவை இருக்கும். பெப்பர் கோர்ன், பெல் பெப்பர், பவ்ரிகா பெப்பர், மெக்ஸிகன் பெப்பர், ரெட் பெப்பர், சில்லி பெப்பர், என இன்னும் பல வகையில் கிடைக்கின்றன.

இவை உணவில் காரத்திற்காகவும், வாசனைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் உணவு செமிபாட்டிற்கு உதவக் கூடியது.

குடமிளகாய் பச்சையாகவே உண்ணக் கூடியது. ஏனைய உணவுகளுடன் கலந்தும் சமைத்துக் கொள்ளலாம்.

இன்று நிரப்பல் கொண்டு தயாரிக்கப்பட்ட குடமிளகாய் சலட் செய்து கொள்வோம். இங்கு பச்சைநிற குடமிளகாய் பயன்படுத்தப்பட்டுள்ளது. விருந்துகளின் போது அனைவரின் கண்ணையும் கவர்வதற்கு பல வர்ணங்கiளைக் கொண்ட குடமிளகாய்களைப் பயன்படுத்தலாம்.

குடமிளகாய் நிரப்பலுக்கு

சிவப்பு குடமிளகாய் – 1
பச்சை குடமிளகாய் – 1
மஞ்சள் குடமிளகாய் – 1
விரும்பிய அரைத்த இறைச்சி – ½ கப்
விரும்பிய மீன், இறால் அல்லது நண்டு – ½ கப்
முட்டை – 2
வெங்காயம் – ½
மிளகாய்த் தூள் – ¼ ரீ ஸ்பூன்
சீரகத்தூள்- சிறிதளவு
மஞ்சள் தூள் – சிறிதளவு
தேசிச்சாறு – சில துளிகள்
உப்பு- தேவைக்கேற்ப
சீஸ் துருவல் அல்லது பிரஸ் கிறீம் –

செய்து பாருங்கள்

இறைச்சி, உப்பு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சிறிதளவு தண்ணீர் கலந்து அவித்தெடுத்து வையுங்கள். (அல்லது சற்று ஓயிலில் வெங்காயம், பூண்டு தாளித்து இறைச்சியைச் சேர்த்துப் பிரட்டி உப்பு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் போட்டு, சற்று வேக இறக்கும்போது ஒருரீஸ்பூன் டொமாடோ சோஸ் விட்டு எடுத்து வையுங்கள்.)

மீனை உப்பு, மஞ்சள் தூள், கலந்து சற்று நீர்விட்டு அவித்தெடுத்து முள் நீக்கி உதிர்த்து, வெங்காயம், மிளகு தூள், சீரகத் தூள், தேசிச்சாறு கலந்து எடுத்து வையுங்கள்.

முட்டையை அவித்து எடுத்து சிறிய துண்டுகளாக வெட்டி சீஸ் துருவல், மிளகு தூள், உப்பு, விரும்பினால் கடுகு பேஸ்ட் கலந்து எடுத்து வையுங்கள்.

குடமிளகாயை எடுத்து மேலே காம்புடன் மூடி போன்று வெட்டி எடுத்து வையுங்கள். சலட்களை எடுத்து குடமிளகாயுள் தனித்தனியே நிரப்பி மேலே சீஸ் துருவல் தூவி விடுங்கள். அல்லது பிரஸ் கிரீம் போட்டு வெட்டிய மூடிக் காம்பை மேலே வைத்து விடுங்கள்.

மூவகை சலட்டையும் நீங்கள் விரும்பினால் லேயெஸ் (layers)ஆகவும் ஒரு குடமிளகாயினுள் போட்டு நிரப்பிக் கொள்ளலாம்.

மாமிசம் தவிர்த்து உண்பவர்கள் தக்காளி, கரட், வெங்காயம், வெள்ளரிக்காய், அவித்த கிழங்கு, சோயா பயன்படுத்தி நிரப்பிக் கொள்ளலாம்.

பிளேட்டை எடுத்து வட்டமாக வெட்டிய வெங்காயம், தக்காளியை வைத்து அதன்மேல் நிரப்பிய குடமிளகாய்களை வைத்து கண்ணைக் கவரப் பரிமாறுங்கள்.

மாதேவி

>


சாதாரண கீரை மசியல், கீரைப் பொரியல், இரண்டும் சாப்பிட்டு அலுக்கும் போது இப்படி செய்து கொண்டால் சுவை கொடுக்கும்.
குழந்தைகளும் கீரையை தனியே சாப்பிட அடம் பிடிப்பார்கள். மாங்காய் சலட்டுடன் கலந்து கொடுக்கும் போது அடம் பிடிக்காமல் கீரையைச் சாப்பிடுவார்கள்.
அதில் இரு வகை ருசி இருப்பதால் கலந்து சாப்பிடும் போது வித்தியாசமான சுவையைத் தரும்.
சமைத்துத்தான் பாருங்களேன். கீரைக்கு புளிப்பு சலட் சேரும்போது ஆகா சொல்லத் தோன்றும்.
செய்யத் தேவையான பொருட்கள்
1. முளைக்கீரை – 1 கட்டு
2. பச்சை மிளகாய் – 4
3. சாம்பார் வெங்காயம் – 6-7
4. பூண்டு – 4
5. மிளகு, சீரக்கப் பொடி, பெருங்காயப் பொடி – சிறிதளவு
6. அரைத்த தேங்காய் கூட்டு – 1 டேபிள் ஸ்பூன்
7. கெட்டித் தேங்காய்ப்பால் – 2 டேபிள் ஸ்பூன்
8. உப்பு தேவைக்கு ஏற்ப
சலட் செய்ய
1. மாங்காய் -1
2. சாம்பார் வெங்காயம் – 5-6
3. பச்சை மிளகாய் -1
4. சீனி – 1 ரீ ஸ்பூன்
5. உப்பு தேவைக்கு ஏற்ப
செய்முறை
கீரையைத் துப்பரவு செய்து 4-5 தரம் நீரில் கழுவி எடுத்து சிறிதாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
வெங்காயம் 2-3 துண்டுகளாக வெட்டுங்கள்.
மிளகாய் நீளமாக வெட்டி எடுங்கள்.
பூண்டு பேஸ்ட் செய்து வையுங்கள்.
பாத்திரத்தில் கீரையைப் போட்டு மிளகாய் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அவிய விடுங்கள்.
அவிந்ததும் சற்று மசித்து பூண்டு பேஸ்ட் மிளகு சீரகப் பொடி வெட்டிய வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் கிளறுங்கள்.
பின் அரைத்த தேங்காய் கூட்டு, தேங்காய்ப் பால் விட்டு இறக்கி வையுங்கள்.
விரும்பினால் கடுகு வறமிளகாய் தாளித்துக் கொட்டி கலந்து விடுங்கள்.
சலட் செய்முறை
மாங்காயைத் துருவி எடுங்கள்.
புளிமாங்காய் என்றால் சிறிதளவு உப்பு நீர் விட்டு பிழிந்து எடுங்கள்.
வெங்காயத்தை சிறியதாக வெட்டி கலந்து விடுங்கள்.
மிளகாயை 5-6 துண்டுகளாக வெட்டி விடுங்கள்.
சீனி உப்பு சேர்த்து கலந்து விடுங்கள்.
பிளேட் ஒன்றில் கிறீன் லீப் கறியை இரு புறமும் வைத்து சலட்டை நடுவில் வைத்து பரிமாறுங்கள்.
புளிப்புச் சுவையுடன் கூடிய சலட் வித்தியாசமாக இருப்பதால் அனைவரையும் கவரும்.
:- மாதேவி -:

>

பயறு வகைளில் நிறைந்த புரொட்டின் இருப்பது அனைவருக்கும் தெரிந்த செய்திதான். பொதுவாகவே சமையலில் நாம் பயன்படுத்தி வரும் கடலை, பருப்பு வகைகள், செமிபாடடைவது சற்று சிரமமாக இருக்கும்.
அதைத் தடுக்க இவற்றை நாம் முளைக்க வைத்த பின் சமையலில் சேர்த்து செய்து கொண்டோமேயானால் விரைவில் அவை சமிபாடடையும். அத்துடன் கூடிய போஷணையைப் பெற்றுக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
1. முழுப் பாசிப்பயறு – 1 கப்
2. தக்காளி – 2
3. வெங்காயம் – 1
4. குடமிளகாய் – 1 (விரும்பிய வர்ணத்தில்)
முறை 1
ஓலிவ் ஓயில் 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு பேஸ்ட் ¼ ரீ ஸ்பூன்
உப்பு, மிளகு தூள் தேவையான அளவு
தேசிக்காய் சிறிதளவு
முறை 2
சோயா சோஸ் 2 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள், உப்பு தேவையான அளவு
ஒயில் 1 ரீ ஸ்பூன்
விரும்பினால் தேசிச் சாறு சிறிதளவு.
செய்முறை
பாசிப்பருப்பை தண்ணீரில் 8-9 மணித்தியாலம் ஊற வைத்து எடுக்கவும்.
வெள்ளை நப்கின் துணியை நீரில் நனைத்து எடுத்து அதில் பயறை வைத்து சுற்றி ஒரு கோப்பையில் போட்டு மூடி வையுங்கள்.
மறுநாள் காலையில் திறந்து பார்த்தால் சிறிது முளை வந்திருக்கும்.
துணி உலர்ந்திருந்தால் சிறிது தண்ணீர் தெளித்து மீண்டும் மடித்து வைத்து மூடிவிடுங்கள்.
மறுநாள் காலையில் எடுத்தால் நன்றாக முளை விட்டிருக்கும்.
எடுத்து உணவு தயாரித்துக் கொள்ளலாம்.
(இப்பொழுது சுப்பர் மார்க்கட்டுகளில் பக்கற்றுகளாக முளைத்த பயறு கிடைக்கிறது)
சலட் செய்யும் முறை 1
தக்காளி, குடமிளகாய், வெங்காயம், நீள் துண்டுகளாக வெட்டி வையுங்கள். ஒரு போலில் போடுங்கள்.
முளைப் பயறையும் கலந்து விடுங்கள்.
ஒலிவ் ஓயில் அல்லது சலட் ஓயில் உடன் பூண்டு பேஸ்ட், உப்பு மிளகு, தூள் கலந்து எடுத்து, சில துளி எலுமிச்சம் சாறு விட்டு வெஜிட்டபிள் மேல் ஊற்றி கலந்து விடுங்கள்.
பச்சைப் பயறாக நேரடியாக சாப்பிடுவது சிறந்தது.
சலட் செய்யும் முறை 2
தக்காளி, குடமிளகாய், வெங்காயம், நீள் துண்டுகளாக வெட்டி வையுங்கள்.
பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஓயில் விட்டு முளைப் பயறைப் போட்டு இரண்டு பிரட்டு பிரட்டி உப்பு, சோயா சோஸ், மிளகு தூள், தூவி கலந்து இறக்கி விடுங்கள்.
நல்ல மிளகு வாசனையுடன் இருக்கும்.
அத்துடன் வெட்டி வைத்த மரக்கறிகளை எடுத்து அவற்றிலும் சிறிது உப்பு, மிளகு தூள் கலந்து முளைப் பயறையும் கலந்து விடுங்கள்.
விரும்பினால் தேசிச்சாறு சேர்த்துக் கொள்ளுங்கள்.
பிளேட்டில் எடுத்து வைத்து விடுங்கள்.சத்துச் செறிவு மிக்க சலட் உங்களை அழகுடன் சாப்பிட அழைக்கும்.
:- மாதேவி -:
Advertisements