You are currently browsing the category archive for the ‘சாத வகை’ category.

வேட்டைக் காலம் முடிய மனித நாகரீகத்தின் ஆரம்பமாக விவசாயம் செய்ய நதிக்கரை ஓரங்களில் குடியேறினர்.

சோறும் தானியங்களும் பழைய கால பிரதான உணவாக இருந்திருக்கின்றன. தினைப்புலம் காத்த வள்ளியும் எங்கள் புராணக்கதையில் இருக்கின்றார்.

ஆரியர்கள் தானியங்ளைப் பயிரிட்டு இருந்தார்கள் என்பதை பாரம்பரிய கதைகளிலிருந்து அறிகின்றோம். பாளி நூலில் 307 வகையான நெல்லினங்கள் காணப்படடன என்கிறார்கள்.

நன்றி commons.wikimedia.org

பழம் தமிழர் உணவுகள் தினைச்சோறு, சாமைச்சோறு, வரகரிசிச் சோறு,உழுத்தம் சோறு, வெண்சோறு, கம்பஞ் சோறு, மூங்கில் அரிசிச் சோறு,  நீர்ச் சோறு, குறுணி அரிசிச் சோறு, கூட்டாஞ் சோறு, என பல்சுவைப் பட்டதாக இருந்திருக்கின்றன.

ஆசிய நாட்டவர்களின் பிரதான உணவு நெல் அரிசிச் சோறு. இலங்கையும் அரிசி உணவை உண்ணும் முதன்மை நாடாக விளங்குகிறது.

நன்றி eelamlife.blogspot.com

இலங்கையில் வடக்குக் கிழக்கு உள்ளிட்ட பல பாகங்களிலும் நெல் பயிரிடப்பட்டு வருகிறது.

உலகில் அதிகம் உண்ணப்படும் தானியம் அரிசியே ஆகும். 40க்கு மேற்பட்ட நாடுகளில் அரிசியே பிரதான உணவாக இருக்கிறது.

Thanks:- perfecthealthdiet.com

அரிசியுணவுண்ணும் நாடுகளில் (China, India, Japan, Indonesia, and southeast Asia; and in sub-Saharan Africa) உடல் அதீத பருமனடைவோர் (Obese) குறைவு என்கிறார்கள். படம் மேலே.

உலகளாவிய ரீதியில் உணவிலிருந்து கிடைக்கும் சக்திப் பெறுமானத்தில் 20 சதவிகிதத்தை அரிசியே வழங்குகிறது. அதே வேளை கோதுமை 19 சதவிகிதத்தையும், சோளம் 5 சதவிகிதத்தையும் வழங்குகிறது.

கலர் கலராகவும் அரிசிகள் கிடைக்கின்றன. நாம் காணும் வெள்ளை அரிசி, தவிட்டு நிற அரிசி என்பவற்றிக்கு அப்பால் சிவப்பு, கத்திரிப்பூ கலரிலும் கிடைக்கின்றன.

கீழே Korean Purple Rice and Beans

Thanks:-  mightysweet.com

இலங்கையைப் பொறுத்தவரையில் அரிசி உற்பத்தியில் தன்னிறைவு அடையவில்லை. இந்தியா சீனா போன்ற வெளி நாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுகிறது.

மாறி வரும் கால நிலை மாற்றங்களும், நீர் பற்றாக் குறையும் மழையின்மை, வரட்சி, வரட்சிக்குப் பின்னான பெருவெள்ளப் பெருக்குகளாலும் பயிரிடுவதில் பிரச்சனைகளும் சவால்களும் எழுகின்றன. நிலத்தடி நீர் வரட்சியடையும்போது உவர்ப்புத் தன்மை உண்டாகும். கடல் நீர் உயர்வதாலும், கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீர்உப்பு நீராக மாறுவதாலும் உணவு உற்பத்தியும் பாதிப்படைகிறது.

சீனாவில் வரட்சியடைந்த ஒரு நீர்த் தேக்கத்தில் மிருகங்களும் மனிதர்களும்….

உலகில் அதிக அரிசி ஏற்றுமதி செய்யும் வியட்நாம் மக்கான் டெல்டா பகுதியில் புவி வெட்பத்தால் கடல் நீர் உட்புகுந்து நெல்வயல்கள் அழுகிப் போய் உற்பத்தியும் பாதிக்கப்பட்டது. தொடர்ச்சியான அதீத உரவகைளின் இரசாயனப் பாவனை நிலத்தின் உற்பத்தித் தன்மையைக் குறைக்கின்றது என்கிறார்கள்.

நெல்லைத் தாக்கும் நோயில் பக்டீரியாவின் தாக்கமே அதிக பாதிப்பைத் தருகின்றது. இதைத் தடுக்க இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில்; புதியரக நெல் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘சம்பா மசூ10ரி’ என்ற பெயரிடப்பட்டுள்ள இவ்வினம் பக்றீரியா நோயினால் ஏற்படும் தாக்கத்தை தாங்கக் கூடிய இனம் என்கிறார்கள். இவ்வினத்தை நெல் ஆராச்சி நிலையமும் உயிரியல் மையமும் இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள் என்பது வரவேற்கத்தக்க சிறப்பம்சமாகும். உயரி தொழில் நுட்ப கருவி ஒன்றைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டுள்ளது. பல்வேறுபட்ட சோதனைகள் மேற்கொள்ளபட்டு இதன் தரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

நன்றி:- sreechandrab.sulekha.com பாரம்பரிய முறையில் அறுவடை

ஆரம்பத்தில் தனிமனித உழைப்பால் உருவாக்கபட்ட நெல் விளைச்சல் நாளடைவில் யந்திரங்களின் உதவியுடன் நெல் வெட்டுதல் பணிகள் மேற் கொள்ளப்படுகின்றன.

இயந்திரங்களின் உதவியால் நெல் அறுவடை

நெல் புல் வகையைச் சேர்ந்த தாவரம். தென்கிழக்காசியாவில் தோன்றியது என்கிறார்கள். நாற்று நடுவதற்கு நாற்றுக்கள் முப்பது நாள் பயிராக இருக்க வேண்டும்.

நன்றி blog.balabharathi.net

நெல் 5 மாதங்கள் வரை வளரக் கூடிய ஒருவருடத் தாவரமாகும். உலகில் முதல் முதலாக ஆசிய நெல் ஆபிரிக்க நெல் என இரு இன நெற் பயிர்கள் பயிரடப்பட்டன என்கிறார்கள். ஆசியாவில் நெற் சாகுபடி கி.மு 4500 முன்பாகவே பல நாடுகளில் ஒரே நேரத்தில் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. ஆசிய நெல் சிற்றினம் இமயமலை அடிவாரத்தில் தோன்றியதாக அறியப்படுகிறது.

உலகில் சோளத்திற்கும் கோதுமைக்கும் அடுத்ததாகப் பயிரப்படுவது நெல்தான்.

நாட்டரிசி, மொட்டைக கறுப்பன் அரிசி, வவுனியா அரிசி, வரணி அரிசி, தம்பலகாமம் வயல் நெல் அரிசி, இறத்தோட்டை வயல் நெல், என்றெல்லாம் வண்டில், லொறிகளில் மூட்டை மூட்டையாக பயணித்து வந்தன. பத்தாயங்களில் சேகரித்து வைக்கப்பட்டு கொத்துக்களால் அழந்து எடுக்கப்பட்ட காலங்கள் எல்லாம் மறைந்துவிட்டன. நெல் அவித்து நிழலில் உலர்திக் காயவைத்து உரலில் இட்டு உமி தீட்டி புடைத்து மண்பானையில் இட்டு சோறு ஆக்குவது பாட்டிகாலம் அதன் சுவை இப்போது உண்ணக் கிடைப்பதில்லை.

முற்றத்தில் உலர்திய நெல்லை அணில், குருவிகள், காகம், கோழி கூட்டாக உணவு உண்ணும். உமிக்குருவிஎன்றே ஒரு குருவியினம் இருக்கின்றது. இரவில் எலிகளும் வெட்டிக் கொள்ளும். எறும்பும், அந்துப் பூச்சிகளும் உணவாக்கிக் கொள்ளும்.

போஷாக்கைப் பொறுத்த வரையில் அரிசியில் அதிகமிருப்பது மாப்பொருள்தான். ஆயினும் ஓரளவு புரதமும் இருக்கிறது . இவற்றைத் தவிர நார்ப்பொருளும் அதிகம் உண்டு. தயமின், நியாசின், ரைபோபிளேவின் போன்ற விற்றமின்களும் அதிகமுண்டு. ஆயினும் தீட்டாத அரிசியிலே இவற்றின் செறிவு அதிகமாக இருக்கும். நன்கு தீட்டும்போது தவிட்டுடன் இவை நீங்கிவிடுகின்றன. தவிடு உண்ணும் மாடுகளுக்கு நல்ல போஷாக்குக் கிடைக்க சக்கையை நாம் உண்கின்றோம்.

Rice Nutrition Chart
Rice Type   
Protein (g/100g)   
Iron (mg/100g)   
Zinc (mg/100g)   
Fiber (g/100g)
White Rice (polished)   
6.8   
1.2   
0.5   
0.6
Brown Rice   
7.9   
2.2  
0.5   
2.8
Red Rice   
7.0   
5.5   
3.3   
2.0
Purple Rice   
8.3   
3.9   
2.2   
1.4
Black Rice   
8.5   
3.5   
–   
4.9

கால மாற்றத்தில் வெள்ளை அரிசிகள் முதலிடம் வகிக்கின்றன. சம்பா, பொன்னி, பாஸ்மதி, பாட்னா, சூரியச்சம்பா, எனப் பல்வேறு பெயர்களில் வலம் வருகின்றன. மக்களும் சுவை அதிகம். சமைக்கும் நேரம் குறைவு எனக் காரணம் கூறி இவற்றையே நாடுகிறார்கள்.

தற்கால உணவுப் பழக்கங்களில் உடல் நலம் பற்றிய அக்கறை குறைந்து நாவின் சுவை குறித்த பார்வையே மேலோங்கி நிற்கிறது. இதனால் நாட்டரிசிச் சோற்றை மக்கள் பெரிதும் விரும்புவதில்லை. மெதுவான வெள்ளை அரிசிச் சோற்றையே விரும்புகிறார்கள். அதனால் உண்ணும் அளவும் அதிகரிக்கிறது. எடுக்கும் அளவு கூடுவதால் நீரிழிவு,கொலஸ்டரோல் வருவதற்கு ஏதுவாகின்றன.

அரிசியை வடித்து கஞ்சியைக் கொட்டி சத்துக்களை வீணாக்காமல் சமையுங்கள். கஞ்சியை வடித்தால் வீட்டில் உள்ளோர் பகிர்ந்து குடித்துவிடுங்கள்.

நாட்டரிசிச் சோறு

தேவையானவை
நாட்டரிசி – 1 கப்
தண்ணீர்  – 2 1/4 –  2 1/2 கப் 

செய்முறை

அரிசியைக் கழுவி, கல்லிருந்தால் அரித்து விடுங்கள்.
பிரஷர் குக்கரில் இட்டு தண்ணீரை விட்டு 5 விசில் வைத்து எடுங்கள்.
ரைஸ் குக்கரில் சமைத்தும் எடுக்கலாம்.

-: மாதேவி :-

0.0.0.0.0.0.0
Advertisements

>எனது பாட்டி சொல்லக் கேட்டது இது.

“பழைய காலத்தில் வாழ்ந்த எமது மூதாதையர்கள் வாழ்ந்த வாழ்க்கை மிகவும் சிரமமானது.” என்பதாகும்.

நவீன விஞ்ஞான யுகத்தில் எமக்கு வீட்டிற்குள்ளேயே சமையல் அறை குளியல் அறை, குளிருக்கு குளிக்க ஹொட் வாட்டர், வெப்பத்திற்கு ஏசி என வாழ்க்கை சகல வசதிகளுடன் கூடி சுகபோகமானது.

பழைய காலத்தில் வீடுகள் ஓலைகளால் வேயப்பட்டு சிறியனவாக இருந்தன.

சமையல் அறையோ வீட்டின் கூரையிலிருந்து இறக்கப்பட்ட பதிவான பத்தியாலான சிறிய ஒரு இடமாகவே இருந்து வந்தது.

நமது குடிசைகள் அல்ல, பிலிப்பைன்ஸ்

அவர்களுக்கான தண்ணீர் பெறும் இடங்கள் தெருவுக்கு ஒன்றாக ஆழக் கிணறுகளாக இருந்திருக்கின்றன. ஆவற்றில் இருந்தே அவர்கள் தங்கள் அன்றாட சமையல், குடிநீருக்கான தண்ணீரை பெற்று வந்தனர்.

குளிப்பதற்காகவும், உடைகள் அலசுவதற்காகவும், அவற்றை நாடியே செல்ல வேண்டியிருந்தது. மழைகாலத்தில் சொல்லவே வேண்டியதில்லை. மிகவும் சிரமங்கள் இருந்தன. வீடுகள் மண் குடிசைகளாக இருந்ததால் நிலம் களி மண்ணால் ஆனது. அதனால் சாணத்தால் மெழுகியிருப்பர்.

மழைகாலத்தில் நிலங்களில் கசிவு இருப்பதால் தாழ் நிலமாக இருப்பின் நிலம் இளகி சொதசொதப்பாகி, கால் வைக்கும்போது கால் புதையத் தொடங்கிவிடும். மிகவும் சிரமத்தின் மத்தியிலேயே வாழ்ந்திருக்கிறார்கள். நிலத்தின் குளிர் உடலில் ஏறி காச்சல், குளிர் நடுக்கம் ஏற்படுவதுண்டு. கை மருந்துகள்தான் பலன் கொடுக்கும்.

குளிரிலிருந்து விடுபட வீட்டின் ஒரு மூலையில் நான்கு மூலைகளிலும் கற்களை அடுக்கி அதன்மேல் பனங் குற்றிகளைப் பரப்பி பரண் அமைத்து அதன் மேல் சாக்குகள், பாய்கள் போட்டு வைத்திருப்பர். அதன் மேல் படுப்பார்கள்.

பகலில் தொடர்ந்து அடை மழை பெய்யும்போது குளிருக்கு ஏறியும் இருப்பார்கள். முக்கிய பொருட்களை வைத்து எடுப்பதற்கும் கயிற்றினால் கட்டி பலகை வைத்த சிறிய பரண்களைத் தொங்க வைத்திருப்பார்கள்.

நவீன பரண்?

 அடுக்களையிலும் சமையல் பொருட்கள் வைக்க சிறிய பரண் இருக்கும்.

உறியில் சமைத்த உணவை வைப்பர். விறகு அடுப்பு மட்டுமே பாவனையில் இருந்ததால் மழை காலத்திற்கு வேணடிய விறகுகளை குடிசைக்கு வெளியே பின்புறத் தாழ்வாரங்களில் கயிற்றுப் பரண்களில் சேகரித்து வைத்திருப்பர்.

மழைக்காலத்தில் கூரையியிலிருந்து வடியும் மழை நீரை எடுத்து பாத்திரங்கள் கழுவதற்கும் குளிப்பதற்கும் உடைகள் அலசுவதற்கும் உபயோகித்து வந்திருக்கிறார்கள்.

பச்சை அரிசியும் பாசிப்பயறும்

மாரி காலத்தில் அவர்களின் உணவு மிக இலகுவாகச் சமைக்கக் கூடியதாகவும், சத்து மிக்கதாகவும் இருந்ததுடன் குளிருக்கு இதமூட்ட சுடசுடச் சாப்பிடும் உணவுகளாகவும் இருந்தன.

இவ்வகையில் தேங்காய்ப் பால் கஞ்சி, ரொட்டி, பிட்டு வகைகள் இருந்தன.

இடை உணவுகளாகச் சாப்பிடுவதற்கு கோடையில் செய்து சேர்த்து வைத்திருந்த பினாட்டு, புழுக்கொடியல், பனங்கட்டி உதவின. இம் முறையில் ஊறுகாய், வற்றல் மிளகாய், வடகம், கருவாடு என்பனவும் கை கொடுத்தன.

சாதத்துடன் சம்பல் செய்தும் உண்டனர். கஞ்சியுடன் கடிப்பதற்கு பச்சை மிளகாய், வெண்காயம், சுட்ட கருவாடு என்பன துணை போயின. இல்லாதபோது பினாட்டை தொட்டுக் கொண்டே குடித்தனர்.

இவ்வாறு தொடங்கிய எமது பாரம்பரிய உணவுகளை எங்கள் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்வதோடு சமைப்பதற்கும் பழகிக் கொள்ளுவோம்.

சிவப்பு பச்சை அரிசியுடன் பாசிப் பருப்பும் சேர்வதால் சத்தும் மிக்கது.

தேவையான பொருட்கள். 

  • தீட்டல் சிவப்பு பச்சை அரிசி – 1 கப்
  • வறுத்து உடைத்த பாசிப் பருப்பு – ¼ கப்
  • தேங்காய்ப் பால் – 1 கப்
  • பச்சை மிளகாய் – 2
  • சின்ன வெங்காயம் – 10
  • தேசிப் புளி – ¼ பழம்
  • உப்பு தேவையான அளவு.
காரச் சட்னி

காரச் சட்னி ஒன்றும் தயாரித்து வையுங்கள்.

செய்முறை

அரிசி பருப்பைக் கழுவி 4 கப் நீர் விட்டு அவித்து எடுத்துக் கொள்ளுங்கள். குக்கரில் 5-6 விசில் வைத்து எடுக்கலாம்.

தேங்காயப் பால் கஞ்சி


பின் உப்பு தேங்காப் பால் விட்டு ஒரு கொதி விட்டு இறக்குங்கள்.

கஞ்சியை இரண்டு பாகமாகப் பிரித்து ஒரு பாகத்தில் சிறிதாக வெட்டிய  மிளகாய், வெங்காயம், தேசிப்புளி கலந்து விடுங்கள்.

மற்றைய பகுதியை காரச் சட்னியுடன் பரிமாறுங்கள்.

இரு வேறு சுவைகளில் சுடச் சுட பால் கஞ்சி அசத்தும்.

சிறுவர்களுக்கு இனிப்பு விரும்பினால் சரக்கரை சேர்த்து இனிப்புக் கஞ்சி தயாரிக்கலாம்.

மாதேவி

 :-:-:-:-:-:-:-:-:-


தென்னை வெப்ப மண்டலப் பிரதேசங்களுக்கானது.
கடற்கரை பிரதேசங்களில் பெரும்பாலும் பயிர் செய்யப்பட்டிருக்கும்.


இதன் அனைத்துப் பொருட்களும் பயன்படக் கூடியவை.

இளநீர், தேங்காய், கொப்பரை, எண்ணை சமையலுக்காகவும்
புண்ணாக்கு கால்நடை உணவாகவும்,
கள்ளு போதைக்காகவும்,
தென்ஓலை, காய்ந்த ஓலை குடில்மேய, வேலி அடைக்கவும்,
காய்ந்த பாகங்கள் விறகிற்காக.
சிறட்டை கரிக்காகவும் பயன்படுகிறது.

இளம்காய்கள் இளநீராக அருந்தவும் செவ்விளநீர் என்பது சிறப்பாக இளநீருக்கானது. இளநீரை வழுக்கையுடன் கலந்து குடிப்பதிலுள்ள சுவை தனிதான்.


முற்றிய தேங்காய் சமையலுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

இலங்கை, தென்னிந்தியாவில் குறிப்பாக கேரளாவின் சமையல்களில் முக்கிய இடத்தைப் பிடிக்கும்.

யாழ்ப்பாணச் சமையலில் தேங்காய் உபயோகப் படுத்தாத சமையல்களே கிடையாது.

தேங்காய் சம்பலின் சுவை உங்களுக்குத் தெரியும் தானே!

நன்கு முற்றிய காய்களை உலரவைத்தெடுத்து கொப்பரை ஆக்கி சமையலில் பயன்படுத்துவர்.

மிகவும் உலர்ந்த கொப்பரைகளை அரைத்துப் பிழிந்து தேங்காய் எண்ணை எடுப்பர்.

தேங்காயுடன் மசாலாக்களை வைத்து அம்மியில் அரைத்தெடுத்த பாட்டியின் கூட்டுக்கறிகளின் சுவை உங்கள் நாக்கில் நீர் ஊறவைக்கிறதா ?

சாதங்கள் பல வகையானவை.

தேங்காய் சாதம்

பாரம்பரியமாக இருந்துவருவது இந்த தேங்காய் சாதம்.
மிகுந்த சுவையானது.
அவசர சமையலுக்குப் பெரிதும் ஏற்றது.
பட்சலருக்கு மிகவும் இலகுவாகச் செய்யக்கூடியது.

தேங்காயில் கொழுப்பு அதிகம் இருக்கிறதுதான் எப்போதாவது ஒருதடவை சாப்பிடுவதில் தவறில்லையே.


தேவையான பொருட்கள்

சாதம் – 1 கப்
தேங்காய்துருவல் – ½ கப்
கடலைப்பருப்பு -2 டேபல் ஸ்பூன்
செத்தல் மிளகாய் – 4
கஜு – 10
கடுகு – ¼ ரீ ஸ்பூன்
உழுத்தம் பருப்பு – 2 ரீ ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
நெய் அல்லது மாஜரின் – 2 டேபல் ஸ்பூன்.

செய்முறை


கடலைப்பருப்பு ,செத்தல் மிளகாய் வறுத்துப் பொடித்தெடுத்துக் கொள்ளுங்கள்.

ஒரு டேபிள் நெய்யில் கடுகு, உழுத்தம் பருப்பு, கறிவேற்பிலை தாளியுங்கள்.

அடுப்பைக் குறைத்து வைத்து அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து கிளறுங்கள்.

இத்துடன் கஜு சேர்த்து வறுத்துவிடுங்கள்.

சாதத்தைக் கொட்டி பொடித்த கடலைப் பருப்பு ,செத்தல் பொடி உப்பையும் கலவுங்கள்.

நன்கு கிளறி மேலே மிகுதி நெய்யை விட்டு கிளறி இறக்குங்கள்.

வறுத்த உழுத்தம் பருப்பு கஜுவுடன் தேங்காயின் மணம் கமழும் தேங்காய்சாதம் உங்களை சாப்பிட அழைக்கும்.

சைவம் சாப்பிடுவோர் கிழங்குப் பிரட்டல் பொரித்த பப்படங்களுடனும் பரிமாறலாம்.

அசைவம் சாப்பிடுவோர் மசாலாச் சிக்கன் சேர்த்துக்கொண்டால் சாதத்தின் சுவை அதிகமாகும்.

மாதேவி

மரக்கறி உணவுகள் என்றாலே முகம் சுழிப்பார்கள் குழந்தைகள். அவர்களுக்கு இப்படியான உணவுகள் சாப்பிடுவது என்பது வெறுக்கத்தக்க நேரம்தான்.

இதைத் தவிர்க்க என்ன செய்யலாம்.

கண்ணுக்குக் கவர்ச்சியாக மாற்று முறையில் தயாரித்துப் பரிமாறினால் பலவகை மரக்கறி உணவுகளையும் சாப்பிட வைத்துக் கொள்ள முடியும்.

பீன்ஸ், கோவா, பீட்ரூட், வெண்டைக்காய், முள்ளங்கி, பாவற்காய், வாழைமொத்தி, கோஹில தண்டு, போன்ற பெயர்கள் பல பெரியவர்களுக்குக் கூடப் பிடிப்பதில்லை.

கலர் கலரான சாப்பாடு

பீட்ரூட்டை தனியே சமைத்துக் கொடுப்பதை குழந்தைகள் விரும்பாத போது சாதத்திற்குள் கலந்து செய்து கொடுக்கலாம். கண்கவரும் சிவத்த சாதத்துடன் சுவை சேர்க்க நெய். கஜீ, சேர்த்துக் கொண்டால் விரும்பி உண்பார்கள்.

பீட்ரூட்டை கூடிய நேரம் சமைத்தால் அதிலுள்ள மிக முக்கியமான போசனைப் பொருட்கள் யாவும் அழிந்துவிடும். பச்சையாக உண்பது சமிபாடடையச் சிரமமாக இருக்கும்.

எனவே நீராவியில் அவித்தெடுத்துச் செய்து கொண்டால் சத்துக்கள் அழியாது இருப்பதுடன், விரைவில் சமிபாடும் அடையும்.போஷாக்கு உள்ளது
நார்ப்பொருள் அதிகமுள்ளது. Vitamin C, Folic acid அதிகமுள்ளது. Vitamin A, Thiamin, Riboflavin, Niacin, Vitamin B6 and Pantothenic Acid ஆகியன ஓரளவு உண்டு

பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து, பொஸ்பரஸ், ஆகியன அதிகம் அடங்கியுள்ளது. ஆனால் கல்சியம், சின்க், செலினியம் ஆகியன ஓரளவே உண்டு.

அதில் குறைந்தளவு கலோரிச் சத்தே உண்டு. 100 கிராம் பீட்டில் 43 கலோரி மட்டுமே உண்டென்பதால் எடை குறைப்புச் செய்ய விரும்புபவர்கள் சலட்டில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

நோயெதிர்ப்பு

இரத்தசோகையை குறைக்கும். இரும்புச் சத்து அதிகமுள்ளது.

பீட் ஜூஸ் அருந்துவது உயர்இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் எனக் கூறுகிறார்கள்.

புற்றுநோயைத் தடுக்கும் பீட்டாஅமினோ அசிட் இதில்

அடங்கியுள்ளது.

ஜூஸ் ஆக அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்மலச்சிக்கலைத் தடுக்கும்.

நாட்பட்ட மலச்சிக்கலுக்கும் சுகம் தரும்.

உடல் இளைக்க பீட்ரூட்டை அடித்து எடுத்து உப்பு, மிளகு, சிறிது தேசிக்காய் விட்டு அருந்தலாம்.

பீட்ரூட் சாற்றை தனியே குடிக்க முடியாதவர்கள் தோடம்பழச் சாறு, ஆப்பிள் சாறு கலந்து குடிக்கலாம்.

பீட்ரூட் கிழங்கைச் சேமித்து வைத்தல்

ஈரலிப்பான மண் நிலத்தில் வைத்துப் பாதுகாக்கலாம். பிரிட்ஸ்ல வைத்தால் ஓரிரு வாரம் இருக்கக் கூடியது.

வைன், சீனிRum, Tuzemak, Vodka போன்ற மதுவகைகளுக்கும், சீனி தயாரிப்பிற்கும் வெவ்வேறு விசேடமான பீட் வகைகள் பயன்படுத்தப்படுகின்றன. உணவுக்குப் பயன்படுவதிலிருந்து இவை வேறுபட்டவையாகும்.வழமையான ரெட் பீட்டிலிருந்து சிறந்த வைன் தயாரிப்பார்கள். இதைப் பதப்படுத்திச் செய்ய நீண்டகாலம் எடுக்கும்.

பீட்ரூட் சாதம்சாதம் – 1 கப்

பீட் பெரியது – 1

பம்பாய் வெங்காயம் – 1

பச்சை மிளகாய் – 2

கருவேற்பிலை – 2 இலைகள்

கஜூ – 10

மிளகாய்ப்பொடி – 1 ரீ ஸ்பூன்

உப்பு தேவைக்கு ஏற்ப

தாளிக்க

கடுகு – ¼ ரீ ஸ்பூன்

உழுத்தம் பருப்பு – 1 ரீ ஸ்பூன்

நெய் அல்லது மாஜரின் – 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை

தோலைச் சீவி பீற்றூட்டைத் துருவி வையுங்கள்.

மெல்லிய நீள் துண்டுகளாக வெங்காயத்தை வெட்டி வையுங்கள்.

மிளகாயை நாலு பாகமாக வெட்டிவிடுங்கள்.

கஜூவை உடைத்து வையுங்கள்.

சிறிது மாஜரினில் கஜூவைப் பொரித்து எடுத்து வையுங்கள்.

ஒரு டேபிள் மாஜூரினில் உப்பு, மிளகாய்த்தூள் பிரட்டி எடுத்த வெங்காயத்தைப் பொரித்து எடுத்து வையுங்கள்.

மிகுதி மாஜரீனை விட்டு கடுகு, உழுத்தம் பருப்பு தாளித்து பச்சை மிளகாய் கருவேற்பிலை போட்டு துருவிய பீட் போட்டு வதக்கி, உப்பு மிளகாய்ப் பொடி இட்டு சாதம் சேர்த்துக் கிளறி எடுங்கள்.

பரிமாறும் பிளேட்டின் பாதியில் அரைவாசி போட்டு மேலே பொரித்த கஜூ, வெங்காயம் தூவி விடுங்கள்.

தயிர்ச் சாதம்

சாதத்தில் தயிர் உப்பு, பெருங்காயப் பொடி கலந்து சாதா தயிரச்சாதம் செய்வதை விட வெங்காயம், பச்சை மிளகாய், கரட்,வெள்ளரிக்காய். இஞ்சி கருவேற்பிலை,மாதுளைமுத்துக்கள் கலந்து செய்து கொள்ளலாம்.

தயாரிக்க

சாதம் – 1 கப்

தயிர் – ½ கப்

துருவிய கரட் – 1

துருவிய வெள்ளரிக்காய் -1

மாதுளைமுத்துக்கள் – 1/4 கப்

பச்சை மிளகாய் – 1-2

சாம்பார் வெங்காயம் – 10-15

கருவேற்பிலை- 2 இலைகள்

மல்லித்தழை – சிறிதளவு

இஞ்சி – துருவியது 1 ரீ ஸ்பூன்

உப்பு, பெருங்காயம் சிறிதளவு

தாளிக்க

கடுகு – 1 ரீ ஸ்பூன்

கருவேற்பிலை 2 இலைகள்.

ஓயில் 1 ரீ ஸ்பூன்

செய்முறை

வெங்காயம், மிளகாய், கறிவேற்பிலை,மல்லித்தழை சிறியதாக வெட்டி எடுங்கள்.

ஓயிலில் கடுகு கருவேற்பிலை தாளித்து சாதத்தில் கொட்டிக் கலந்து விடுங்கள்.

தயிரை நன்கு கலக்கி எடுத்து உப்பு, பெருங்காயம்,கலந்து சாதத்தில் ஊற்றிகலந்துவிடுங்கள்.

துருவிய கரட்,வெள்ளரி இஞ்சி,வெங்காயம், மிளகாய் கறிவேற்பிலை,மல்லித்தழை,மாதுளை, கலந்து கிளறிவிடுங்கள்.

பீட் சாதம் வைத்திருக்கும் பிளேட்டின்

மறுபகுதியில் வைத்து பாருங்கள்

தெரியும் அழகு.

அழகில் முழுவதையும் நீங்களே சாப்பிட்டு விடாதீர்கள்.

குழந்தைகள் வரும்வரை காத்திருங்கள்.

ஓடோடி வந்து குழந்தைகள் முடிப்பார் பிளேட்டை. பிறகென்ன உங்கள் முகத்தில் ஆயிரம் வோல்ட் பல்ப் மகிழ்ச்சி தெரியும்.

மாதேவி

> வெங்காயம் பொரிக்கும்போதே அதன் வாசனை ஊரெல்லாம் கமகமக்க வைக்கும். சாப்பிட வேண்டும் என்ற ஆசையைக் கிளப்பும். உப்பு காரத்துடன் எண்ணெயில் பிரண்டு உருண்டு வர நாக்கு சுவைக்கச் சொல்லித் தூண்டும்.

என்ன கொலஸ்டரோல் ஏறப்போகிறது என்கிறீர்களா? இருக்கிறதுதான்.

ஒரு மாறுதல் சுவைக்கு இடையிடையே சாப்பிட்டுக் கொள்ளலாம்.

இத்துடன் பலன்ஸ் கொடுக்க பருப்பு கறி, சோயாக் கறி, வெஜிட்டபில் சொப்சி, மீன் கறி, சலட், பச்சடி, பழவகை ஏதாவது இருவகையைச் சேர்த்துச் சாப்பிட்டுக் கொள்வது உகந்ததாக இருக்கும்.

சாப்பிடத் தயாராகிவிட்டீர்களா?


முதலில் செய்து கொள்வோம்.

அரிசி – 1 கப்
வெங்காயம் – 4
கஜீ – 10
கறிவேற்பிலை – 5-6 இலைகள்
உப்பு தேவைக்கு ஏற்ப
நெய் அல்லது சன் ப்ளவர் ஓயில் – 4-5 டேபிள் ஸ்பூன்

பொடி வகைகள்

மிளகாய்ப் பொடி – 1 ரீ ஸ்பூன்
தனியா தூள் – 1 ரீ ஸ்பூன்
சீரகத் தூள் – 1 ரீ ஸ்பூன்
மிளகு தூள் – ½ ரீ ஸ்பூன்
மசாலா பொடி – ½ ரீ ஸ்பூன்

செய்முறை

சாதம் அவித்து எடுத்து வையுங்கள். வெங்காயம் நீள வாட்டில் மெல்லிய துண்டாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.

கஜீ உடைத்து சிறிதளவு நெய்யில் வறுத்து எடுத்து வையுங்கள்.

வெங்காயத்தில் உப்பு மிளகாய் பொடி பிரட்டி நெய்யில் பொரிய வையுங்கள். நன்றாக இடையிடையே பிரட்டி நன்கு பொரியவிட்டு எடுத்து வையுங்கள்.

ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யில் கறிவேற்பிலையை வதக்கி தனியாப் பொடி, சீரகப் பொடி, மசாலா பொடி, மிளகு பொடி சேர்த்து சாதத்தையும் கொட்டி சிறிதளவு உப்பு போட்டு கிளறிவிடுங்கள்.

பொரித்த வெங்காயத்தில் முக்கால் பாகத்தையும் கஜீவையும் சாதத்தில் சேர்த்து பிரட்டிவிடுங்கள்.

பிளேட்டில் சாதத்தைப் போட்டு பிறிதாக எடுத்து வைத்த வெங்காயப்
பொரியலையும் மேலே தூவி அலங்கரித்துக் கொள்ளுங்கள்.

வெங்காய சீரகப் பொடி வாசத்துடன் பிரியாணி தயார்.

மாதேவி

>

நாள்தோறும் சாதம், சாம்பார் எனச் செய்வதை விட்டு, சாம்பாரில் சேர்க்கும் மரக்கறிச் சத்திற்கு நிகராக சாதத்தில் மரக்கறிகளைச் சேர்த்து இவ்வாறு செய்து கொள்ளலாம். சுவையாகவும் இருக்கும். வழமையில் மாற்றத்தையும் அளிக்கும்

தேவையான பொருட்கள்

1. பசுமதி அல்லது சம்பா அரிசி – 1 கப்

2. கரட் -1

3. லீக்ஸ் -1

4. கோவா – 5-6 இலைகள்

5. பீன்ஸ் – 10

6. வெங்காயம் – 2

7. கஜீ – 10

8. பிளம்ஸ் – சிறிதளவு

9. மஞ்சள் பொடி சிறிதளவு

10. உப்பு சிறிதளவு

தாளிக்க

1. பட்டர் – 1 டேபிள் ஸபூன்

2. பட்டை – 1

3. கிராம்பு – 2

4. ஏலம் – 4

5. பிரிஞ்சி இலை – 2
செய்முறை

1. குக்கரில் பட்டர் ½ டேபிள் ஸ்பூன் விட்டு, பட்டை, கிராம்பு, ஏலம், பிரிஞ்சி இலை தாளித்து ரைஸ் சேர்த்து, 2 கப் தண்ணீர் விட்டு, மஞ்சள் பொடி, சிறிது உப்பு சேர்த்து, 2 விசில் விட்டு அவித்து எடுங்கள்.

2. கரட், லீக்ஸ், கோவா, பீன்ஸ், வெங்காயம், சிறியதாக வெட்டி வையுங்கள். தாச்சியில் ½ டேபிள் ஸ்பூன் பட்டர் விட்டு, வெங்காயம் போட்டு வதங்க மரக்கறிகளைப் போட்டு உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, சாதத்தைக் கிளறி இறக்குங்கள்.

3. சிறிதளவு பட்டரில் வட்டமாக வெட்டிய கரட் துண்டுகள், கஜீ, பிளம்ஸ் வறுத்து எடுங்கள்.

4. சேவிங் பிளேட்டில் சாதத்தைப் போட்டு கரட், கஜீ பிளம்ஸ், வெங்காய வளையங்கள் கொண்டு அலங்கரித்துக் கொள்ளுங்கள்.

குறிப்பு

பட்டாணிக்கறி, எண்ணைய்க் கத்தரிக்காய் சுவை தரும்.விரும்பிய கறிவகைகள் கொண்டு பரிமாறுங்கள். முட்டை இறைச்சி கடல்வகை உணவு ஏதாவது ஒன்றுடன் அசைவம் விரும்புவோர் பரிமாறிக் கொள்ளலாம்.

-: மாதேவி :-

>

துவரம் பருப்பில் நிறைந்த புரோட்டின் இருப்பதால் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இவ் வகையில் தயாரிக்கப்பட்ட உணவுதான் இது.

மிக விரைவாகச சமைக்கவும் பச்சிலேஸ்சிற்கும் இலகுவானது என்பதால் அனைவரும் விரும்புவர்.

சாதத்துடன் பருப்பும் சேர்வதால் போஷாக்கைக் கொடுக்கும். பசியையும் தணிக்கும்.

டயபடிஸ், கொலஸ்டரோல் உள்ளோரும் நெய் தவிர்த்து செய்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

1. அரிசி – 1 கப்
2. துவரம் பருப்பு – ½ கப்
3. தக்காளி – 5
4. சின்ன வெங்காயம் – 10, அல்லது பெரிய வெங்காயம்
5. பெருங்காயம்- சிறிதளவு
6. மஞ்சள் பொடி – சிறிதளவு
7. புளி – சிறிதளவு
8. உப்பு தேவைக்கு ஏற்ப
9. நெய் – 2 டேபிள் ஸ்பூன்

வறுத்து அரைக்க

கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – ½ ரீ ஸ்பூன்
வெந்தயம் ¼ ரீ ஸ்பூன்
செத்தல் மிளகாய் – 4-5
தேங்காய்த் துருவல் – 1 டேபிள் ஸ்பூன்

தாளிக்க

கடுகு – சிறிதளவு
கருவேற்பிலை – சிறிதளவு
செய்முறை

வெங்காயத்தை நீளவாட்டில் வெட்டுங்கள்.

தக்காளியை சிறு துண்டுகளாக வெட்டுங்கள்.

அரிசி பருப்பு மஞ்சள் பொடி கலந்து 2 ½ கப் தண்ணீர் விட்டு பிரஷர் குக்கரில் அவித்து எடுங்கள்.

நெய்யில் கடுகு கருவேற்பிலை தாளித்து வெங்காயம் வதக்கி தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.

வதங்கியதும் உப்பு புளி விட்டு அரைத்த பொடி சேர்த்து கொதிக்க, ரைஸ் போட்டு கிளறி இறக்குங்கள்.

பரிமாறும் பிளேட்டில் போடுங்கள்.

விரும்பிய கறியுடன் பரிமாறுங்கள்.

பப்படம் சுவை கொடுக்கும்

:- மாதேவி -:

>
பரந்த வெளி. சுழற்றி வீசும் அனல் காற்றின் வெப்பம். துடித்துப் பதைத்து மதிய வெப்பத்தில் பாதம் சிவக்க ஓடினால் வாவா என அழைக்கும் ஆல மரக் கூடல். வேர் விட்டு கிளை பரப்பி விசாலித்து நிழலைத் தந்து கொண்டு வழிப்போக்கர்களின் ஓய்விடமாய்…

மரத்தைத் தாங்கும் விழுதுகளில் தொங்கி ஆடும் சிறுவர்களின் கூச்சல் கல்லடுப்புகளில் அவியும் நீர்ப்பாளையம். படைப்பதின் மணம் காற்றில் பரவி ஊரெங்கும் கமழும். கோடை நோய்களைத் தணிக்க, வெப்பத்திற்கு இதமாக அம்மனுக்கு குளிர்த்தி செய்யும் அந்த நாட்களை எப்படி மறக்க முடியும்.

பூசைப் படையலுக்கு கற்பூர ஆரத்தி!

“எப்படா முடியும்” என ஆவலுடன் கைகளில் வாழை இலை துண்டு, ஆலமிலைத் தட்டம், கொட்டாங்குச்சி ஏந்திய வண்ணம் இருக்கும் கூட்டம். அந்த நீர்ப்பாளையத்தின் ருசியையும் மணத்தையும் சொல்வதற்கு வார்த்தைகள் உண்டா?


சாம்பார் சாதம், அவிசு, ஒண்டாக் காச்சல், கறிச்சோறு

இப்படி எத்தனையோ பெயர்களில் அழைக்கலாம்.


தேவையான பொருட்கள்

நாட்டுப்புழுங்கல் அரிசி – 1கப்

(அல்லது சம்பா)


கிராமத்து காய்கறிகள்

மரவள்ளி – ¼ கிலோ
மஞ்சள் பிஞ்சுப் பூசணி (தோலுடன்) – ¼ கிலோ
பயித்தங்காய் – 150 கிராம்
கத்தரிக்காய் – 150 கிராம்
வாழைக்காய் – 150 கிராம்
புடலங்காய் – 150 கிராம்
பலாக்கொட்டை – 10
முளைக்கீரை சிறிய கட்டு -1
தக்காளி -3
கரட் -1 (விரும்பினால்)
துவரம்பருப்பு – ¼ கப்
வறுத்துத் தோல் நீக்கிய பாசிப்பயறு – ¼ கப்
தேங்காய்ப்பால் -1 கப்
மிளகாயத்தூள் -2 தேக்கரண்டி
தனியா -1தேக்கரண்டி
சீரகத் தூள் – 1தேக்கரண்டி
மஞ்சள்பொடி சிறிதளவு
புளி – இரண்டு சிறிய எலுமிச்சை அளவு
உப்பு தேவையான அளவு


தாளிக்க

சாம்பார் வெங்காயம் – 6-7

செத்தல் -1
கடுகு – ½ ரீ ஸ்பூன்
உழுத்தம் பருப்பு – 1 ரீ ஸ்பூன்
நெய் – 2 டேபில் ஸ்பூன்


சேர்த்துக் கொறிக்க சிப்ஸ்

மரவள்ளி – ¼ கிலோ

மிளகாய்த்தூள் – ¼ ரீ ஸ்பூன்
உப்பு சிறிதளவு
பொரிப்பதற்கு தேங்காய் அல்லது சூரியகாந்தி எண்ணெய் – ¼ லீட்டர்


மேலதிக தேவைக்கு

வாழை இலை -1

மண்சட்டி -1
கொட்டாஞ் சோறு ருசிக்கு 1 வெற்றுத் தேங்காய் மூடி


செய்முறை

மரக்கறிகளை நடுத்தர அளவான துண்டங்களாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். வெங்காயம், செத்தல் சிறியதாக வெட்டிக் கொள்ளுங்கள்.

நாட்டுப் புழுங்கல் என்றால் மரக்கறியும் அவிவதற்கான தண்ணீரையும் சேர்த்துவிட்டு, அரிசி பருப்பை அவியவிடுங்கள். அரைவேக்காடு அவிந்ததும் மரக்கறிகள், மிளகாய்ப் பொடிவகைகள், உப்பு சேருங்கள்.

(சம்பா என்றால் அரிசியுடன் பருப்பு மரக்கறிகள் (கீரை, தக்காளி தவிர) சேர்த்து பெரிய ஒரு பாத்திரத்தில் போடுங்கள். அரிசி மரக்கறிகள் மூடும் அளவிற்கு தண்ணீர்; விட்டுவிடுங்கள். மிளகாயப் பொடிவகைகள், உப்புச் சேர்த்து அவிய விடுங்கள்.)

15 நிமிடத்தின் பின் திறந்து பிரட்டி மூடிவிடுங்கள். 10 நிமிடங்களின் பின் கீரை தக்காளி சேர்த்து மூடிவிடுங்கள். 5 நிமிடத்தின் பின் புளிக்கரைசல் ஊற்றி கிளறுங்கள். பின் தேங்காய்ப்பாலையும் விட்டுக் கிளறி சிம்மில் வையுங்கள். இறுக நெய்விட்டு தாளித்துக் கொட்டிக் கிளறுங்கள்.

கொட்டாஞ் சோற்றுக் கோப்பைக்கு

தேங்காயின் அடி மூடியை எடுத்து வாள்பிளேட் கொண்டு வெளித் தும்பை நன்றாகச் சுத்தம் செய்து, 6-7 மணித்தியாலம் தண்ணீரில் ஊறப் போட்டு Steal வூல் கொண்டு உட்புறம் வெளிப்புறம் தேய்த்து உப்பு நீரில் கழுவி எடுத்துக் கொள்ளுங்கள்.

சிப்ஸ்

மரவள்ளியை 2-3 அங்குல நீள் துண்டுகளாக மெல்லியதாகச் சீவி சற்று வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அல்லது பேப்பர் ஒன்றில் போட்டு பான் காற்றின் கீழ் வைத்துவிட்டால் ஈரம் உலர்ந்திருக்கும். பொன்னிறமாகப் பொரித்து எடுத்து, உப்பு மிளகாய்த்தூள் தூவிவிடுங்கள். ஒரு மாதமளவில் கெடாமல் இருக்கும். விரும்பிய பொது கொறித்துக் கொள்ளுங்கள்.

இப்போது சமைத்த சாம்பார் சாதத்தை எடுத்து வாழையிலையில் வைத்து இறுக்கமாக மடித்து வையுங்கள்.

கொட்டாஞ் சோற்றுக் கோப்பை, சட்டி இதிலும் போட்டுக் கொள்ளுங்கள்.

உங்கள் விருப்பமான சுவைக்கு ஏற்ப அம்மன் கோயில் சாதம் அம்மாவின் சட்டிக் கைமணம், கொட்டாஞ் சோற்று நினைவுகளுடன் உண்டு மகிழுங்கள்.

குறிப்பு

பிரஸர் குக்கர், ரைஸ்குக்கர், மைக்ரோ விலும் செய்து கொள்ளலாம். கிராமத்து காய்கறிகள் இல்லாத இடத்தில் பீன்ஸ், கரம், கோவா சேர்த்து செய்து கொள்ளலாம். மசாலா விரும்பினால் பட்டை, கராம்பு, சோம்பு சேர்த்துக் கொள்ளலாம்.

-: மாதேவி :-

>

தங்கம் போலத் தகதகப்பாள், முள் போன்ற மேனியாள் பச்சைக்கிரீடமும் உடையாள் அவள் …

அன்னாசி நெய்ச்சாதம்

தேவையான பொருட்கள்

 அன்னாசி – 2 காய்ப் பழமாக

 அரிசி – 1 கப் (சம்பா அல்லது பசுமதி)

 பச்சைமிளகாய் – 3
 ஸ்பிரிங் அனியன் – சிறுகட்டு – 1
 மிளகாய்ப் பொடி – ½ தேக்கரண்டி
 இஞ்சிப் பேஸ்ட் – 1 மேசைக்கரண்டி
 வெந்தயம் – 1 ரீ ஸ்பூன்
 நெய் – 3 டேபில் ஸ்பூன்

உப்பு தேவையான அளவு

செய்முறை

அன்னாசி ஒன்றை எடுத்து சிறுதுண்டங்களாக வெட்டியெடுத்து மிக்ஸியில் அடித்து ஒரு கப் ஜீஸ் எடுத்துக் கொள்ளுங்கள்.

மற்றைய அன்னாசியை மூள், தோல் இருக்கத்தக்கதாக நன்றாகச் சுத்தப்படுத்தி உப்பு நீரில் கழுவியெடுங்கள். நீளவாக்கில் மூள் இருக்கத்தக்கதாக ¼ பாகம் வெட்டி எடுங்கள். இவ்வாறு வெட்டியெடுத்ததும் மிகுதி கோப்பை போலத் தோன்றும். இதன் உள் இருக்கும் சதையை கூரிய கத்தியால் கவனமாக கோப்பை சிதையாது வெட்டி எடுங்கள். இந்த துண்டுகளை மேலும் சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

வெங்காயத் தாரையும் சிறிதாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். பச்சை மிளகாயை நீளவாக்கில் நடுவே கீறிவிடுங்கள்.

பாத்திரத்தில் இரண்டு டேபில் ஸ்பூன் நெய் விட்டு, அதில் வெந்தயம் வறுத்து, இஞ்சிப் பேஸ்ட் சேர்த்து, பச்சைவாடை போகக் கிளறுங்கள். இனி அன்னாசி ஜீஸ் ஒரு கப் சேர்த்து, மேலதிகமாக ஒரு கப் தண்ணீரும் விட்டுக் கொள்ளுங்கள். உப்பு, மிளகாய்ப் பொடி சேர்த்து அவிய விடுங்கள். விரும்பினால் மஞ்சள் சேர்த்துக் கொள்ளுங்கள். சாதம் அவிந்ததும் எடுத்து வையுங்கள்.

தாச்சியில் 2 ரீ ஸ்பூன் நெய் விட்டு, வெட்டிய அன்னாசித் துண்டுகளைச் சேர்த்து, ஓரு நிமிடம் கிளறி உப்பு சேர்த்து எடுத்து வையுங்கள். அதே தாச்சியில் வெங்காயத்தாரைப் பிரட்டி பச்சை நிறம் மாறுமுன் சாதத்தை தாச்சியில் போட்டு அன்னாசித் துண்டுகள் சேர்த்துக் கொள்ளுங்கள்.

எடுத்து வைத்த முழு வெங்காயத்தாரை பரிமாறும் தட்டில் வைத்து, கோப்பை போன்ற அன்னாசியையும் வைத்து, சாதத்தை அதனுள் நிறைத்து விடுங்கள். வெட்டிய அன்னாசித் துண்டுகள் கொண்டு அலங்கரித்துக் கொள்ளுங்கள்.

அன்னாசி நெய்ச் சாதம் தயார்.

குறிப்பு:- சைவப் பிரியர்களுக்கு உருளைக் கிழங்கு காரப் பிரட்டல் தொட்டுக் கொள்ள உகந்ததாக இருக்கும். அசைவ பிரியர்கள் சில்லி சிக்கன் அல்லது டெவில்ட் புரோன் சேர்த்துக் கொண்டால் சுவையாக இருக்கும்.

மாதேவி

Advertisements