You are currently browsing the category archive for the ‘மின்னேரியா தேசியவனம்’ category.

>ஜீன் தொடக்கம் செப்படம்பர் வரை மின்னேரிய தேசிய வனத்தில் சுற்றுலா சென்று பார்க்க ஏற்ற காலமாக இருக்கும். முன்பதிவுகளில் ஆனையார், குரங்கார், மான்கள், பார்த்துவிட்டோம்.

ஏனைய இங்கு வாழும் மிருகங்கள் பற்றி பார்க்கலாம் வாருங்கள். லெபேர்ட்ஸ், Fishing cats, sambar deers, Spotted cat, Sloth bear, இருப்பதாகச் சொல்கிறார்கள்.
 
அந்தோ பரிதாபம். நாங்கள்தான். மிருகங்கள் அல்ல.

அவர்கள் எங்கள் முகத்தில் முழிக்காமல் தப்பிவிட்டார்கள்.

இருந்தும் எங்களில் முழித்தோர் சிலர் கீழே.

அவர்களிடம் அன்றைய முழிவியளம் எப்படி என்று கேட்டுப் பாருங்கள்.

முதலில் முழித்தவர் மொனிட்டர். ஒரு மரக் குத்தியில் அசையாது இரை விழுங்கக் காத்திருந்தார். அவரைக் கண்டு கொண்டு அப்பால் செல்ல

ஒருவர் ஓட்டமாக ஓடிச் சென்று திரும்பி நின்று போஸ் கொடுக்கிறார்

பாருங்கள். சிவத்தக் கண்ணார். கோழி பிடிக்க தடங்கல் ஏற்படுத்திய எம்மைப் பார்த்து ஒரு முறைப்பு.

நாமும் அவரின் காலை உணவை ஏன் கெடுப்பான் என விலத்திச் சென்றோம்.

சற்றுத் தொலைவு செல்லு மட்டும் ஒருவரையும் காணவில்லை. கீரிப்பிள்ளையாரின் சாபம் எம்மில் ஒட்டிக் கொண்டதோ?

நாங்களும் விடாது தொடர்ந்தோம். குளக்கரை ஓரம் ஆகா நண்பர்களாய் மூவர் தூரத்தே முத்திரிகைத் தோட்டத்தைத் தேடி ஓடிக்கொண்டு இருக்கிறார்களோ?

எந்தப் பறவை வடையாகப் போகிறதோ? அவர்களைத் தடுப்பது நம்மால் முடிந்த காரியமா?

நரிகள் முகத்தில் முழித்தாயிற்று. அப்பொழுது இன்று வெற்றிதான். எமக்கா நரியார்களுக்கா? பார்ப்போம்.

மோகன் மீண்டும் காட்டிற்குள் வாகனத்தைச் செலுத்துகிறார்.

வெற்றி நமக்குத்தான். அது என்ன?

தேன் கூடு. இனிய தேன் சுவைத்தது போல் வெள்ளை நிறத்தாலான கூட்டை அதிசயத்துடன் பார்த்துக் கொண்டோம்.

உங்கள் காட்சிக்கு.

வாகனம் ஓடுகிறது. காட்டின் ஊடே எறும்பார்கள் கூடிக் கட்டிய அழகிய உயர்ந்த வீட்டின் உள்ளே எத்தனை எத்தனை பாம்பார்க்களோ? நினைக்கவே உஸ் சத்தம் கேட்பதுபோல இருக்கிறது. பறநாகம்  எதுவும்  இருக்குமோ? எம்மைப்  பாய்ந்து கொத்துமே எனப் பயந்து ஒரே பாய்ச்சலாய் வாகனம் ஓட ஓட கிளிக்குக் கொண்டு பறந்தோம்.

காட்டு வெளி வந்தததும்தான் மூச்சே வந்தது. புல் தரையில் வாகனம் ஓட பெரிய உடும்பார் ஒருவர் ஊர்ந்து செல்கிறார். அப்புறம் என்ன?

குளக்கரை ஓரம் மீன் பிடித்துக் கொண்டு இருப்போர் சிறிய கைவலை வீசிக் கொண்டு இறால் நண்டு மீன்கள், பிடித்துக் கொண்டு இருந்தார்கள்.

மீன் சாப்பிடுவோராக இருந்தால் ஹொட் ஹொட் ஆக வாங்கி சமைத்து உண்ணலாம்.

வனப் பகுதியில் திரியும் ஏனையோர் யாவர்?

கரையோரம் பெரிய அளவில் காட்டு எருமையார்களின் கூட்டம். கிட்டச் செல்லவே பயத்தைத் தந்தது. கூரிய கொம்பால் பிரட்டிப் போட்டால் என்ன செய்வது? தூர இருந்தே பார்த்துக் கொண்டோம்.

காட்டின் உள்ளே மீண்டும் புகுந்தோம். Watch tower தென்பட்டது. எல்லோருக்கும் ஒரே கொண்டாட்டம். ஏணிப்படியில் மூச்சிரைக்க ஏறினோம்.

உயரே சென்று காட்டை நாற்புறமும் ரசித்தோம். தூரத்தே யானையார் கூட்டம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதிகாலை சூரியனின் கதிரில் சிறகடித்துப் பறந்து திரியும் பறவையார்கள், அழகிய நீண்ட கடல் நீர் சூரிய ஒளியில் வெளிறித் தளதளத்துக் கொண்டிருந்தது.

பாரிய உயர்ந்த பச்சை நிற மரங்களின் கிளைகள் கண்ணுக்குக் குளிர்ச்சியைத்தந்தது, தூரத்தே அழகு சேர்க்கும் மலைக் குன்றுகள் என பலப்…பல…

படியால் இறங்கி கீழே வரவேண்டுமே மெதுவாய் பயந்தபடியே இறங்கி வந்தோம்.

அருகே கொடுக்காய்ப் புளியை நினைவூட்டும் ஏதோ…கொத்துக் கொத்தாய் காட்டுக்காயாக இருக்கும்போலும்

இறங்கிநின்று பார்த்து படம் எடுத்துக்கொண்டோம்.

மிகுந்த கவலையுடன் வாகனத்தில் ஏறி மின்னேரிக்கு  நன்றி கூறிக்கொண்டு வெளியே வந்தோம். இனிய பயணம் முடிவுக்கு வந்தது.

இவ்வளவு நேரமும் பசியே தெரியவில்லை. இப்பொழுது கிள்ளத்தொடங்கியது. வெளியே தெருஓரத்தில் கலைப்பொருட்கள் விற்கும் கடை ஒன்று. மின்னேரிய பறவைகளின் ஞாபகமாக சின்னு தனது கார்டனில் வைக்க ஒரு ‘பேட்ஸ் கவுஸ்’ விரும்பி வாங்கிக் கொண்டாள். அதையும் சுமந்தபடி ஹோட்டல் புப்வேயை நோக்கிச் சென்றோம்.

சிவப்பு, வெள்ளைச் சாதங்கள், இடியாப்பம், அப்பம், புட்டு, கறிவகைகள் என வெட்டினோம். வயிறுநிறைய…. ‘காட்டுப்பசி’ அல்லவா.

வாழ்க்கையில் இனிய பயணங்கள் மீண்டும் வரும் என நம்புவோம்.   

மாதேவி

Advertisements

>காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப பறவைகள் தமது வாழ்விடங்களை மாற்றிக் கொள்ளும். அதி குளிர் காலங்களில் பனிப் பிரதேசங்களில் வாழும் பறவைகள் வெப்பவலயப் பிரதேசங்களுக்கு பல மைல்கள் கடந்து செல்லும்.

இயற்கையின் வனப்பான ஓவியமாக..

ஆயிரக் கணக்கில் கூட்டாக இடம் பெயரும். அப்பொழுது பல சிரமங்களையும் அவை சந்திக்க நேரிடும். நீண்ட நாட்களுக்கு உணவு அருந்தாமல், தொடர்ந்து பறந்து செல்ல வேண்டியும் நேரிடும்.

பெரும் கடல்கனைத் தாண்டும்போது தரிக்காது தொடர்ந்து செல்லும். பறக்கும் காலத்திற்கு முன்பே நிறைய உணவுகளைச் சாப்பிட்டு கொழுப்பைச் சேமித்து வைத்திருக்கும். அதிலிருந்து பறப்பதற்கான சக்தியைப் பெற்றுக்கொள்ளும்.

சிந்து பாடும் பறவைகள் நாம் திருடித் தின்ன வருகிறோம்.

 சேறு நிறைந்த களிமுகப் பகுதிகள், நீர்த் தேக்கங்கள், ஆற்றங்கரைகள், கடற்கரைகள், பாறைகள் நிறைந்த கரையோரங்கள், நீர் நிலைகளை அண்டிய மரக் கூடல்கள், என இரைகள் ஏராளமாகக் கிடைக்கும் இடங்களில் குடிபுகும்.

கண்ணும் கண்ணும் கலந்து சொந்தங் கொண்டாடுதே…

இக்காலத்தில் இணையத் தேடி, முட்டையிட்டு, அடை காத்து, குஞ்சுகளை வளர்த்து அவை பறக்கும் வயது வர காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப மீண்டும் தமது பழைய இடம் நோக்கிப் பயணிக்கும்.

தங்கமீனே தங்கமீனே மொறுமொறு சோளப் பொரி நான் தருவேனே

சில பறவைகள் பறக்கும்போது எங்கும் தரிக்காமல் தொடர்ந்து 4500 கிலோ மீற்றர் வரை பறக்கக் கூடியவை.பசிபிக்கில் உள்ள பொன்நிற உப்புக் கொத்தி இவ்வகையானது.

காத்திருந்து நொந்தேனே, வயிறு வற்றிப் போனதிங்கே

பெரும்பாலும் தொடர்ந்து காலம் காலமாக ஒரே இடத்தில் வந்து தங்கும். அதனால் இவற்றின் வாழும் இடங்களை சிதைக்காமல் காப்பது எமது கடமையாகும். பறவைகள் தங்கிச் செல்ல சரணாலயங்களை அமைத்து அவற்றைப் பாதுகாக்கவும் வேண்டும்.

காதலர் இருவர் ஊடலில் முகம் திருப்பினரோ?

இலங்கையில் பறவைகள் சரணாலயம் குமணவில் அமைந்துள்ளது.

மீனைக் குறி வைக்கும் கழுகுக் கண்ணர்

பறவைகள் தூங்கும்போது தமது சிறகுகளை சிலிர்த்துக் கொண்டு உப்பலாக வைத்துக் கொள்ளும். அதனால் இறகுகளுக்குள் காற்றுப் புகுந்து உடல் வெப்பம் வெளியே செல்லாதபடி தடுக்கும். குளிரிலிருந்தும் இவற்றைக் காக்கும்.

பென்குயின் பறவை கடல் நீரையும் பருகும்.  பறவைகள் சில பறக்கும்போதே தூங்கும். ஆல்பர்ட்றாஸ் பற்வைகள் இவ்வகையன. புறா அதிகமாக நீர் அருந்தும். மிகச் சிறிய முட்டையிடும் பறவை தேன்சிட்டு. பென்குயின், கிவி பஸ்டா பறக்க முடியாத பறவைகளுக்குள் அடங்கும்.

நீலவண்ண பறவையார் பட்ட மரத்தில் மீன் கொத்தக் காத்திருக்கிறாரோ?

மின்னேரியாவில் வெளிநாட்டுப் பறவைகள் வெள்ளை நிறத்தை உடையனவாய் சிறகுகளில் கறுப்பு பற்றிக் அடித்ததுபோல இருந்தன. இவற்றின் சொண்டும்,கால்களும் மஞ்சள் நிறத்தனவாய் காணப்பட்டன. அவை செட்டையை விரித்துப் பறக்கும்போது மிகவும் கவர்ச்சி உடையனவாக இருந்தன.

வானம் வசப்படுகிறது இவர்கள் சிறகடிப்பில்

வெள்ளை, மஞ்சள், கறுப்பு, சாம்பல் நிறங்களில் கொக்கு, நாராய்கள் சிலவும் இருந்தன. Open bills, Painted strokes, Ducks, King fisher, owls, falcon, Shore birds இனங்கள் பெரும்பாலும் இங்கு காணப்பட்டன. சுமார் 160 இன வகையான பறவைகள் இங்கிருப்பதாக அறியத் தெரிகிறது.
 
பல பறவைகள் நதியோரம் நதியோரம் எம்மைச்சுற்றிப் பறந்தன.
பறவைகள் என்றதும் பாடல்களும் நினைவில் பறக்கிறதே…

சிறுவர் பாடல் ஓன்று

அந்திசாயும் நேரம் ஆசையாக நண்டு கவ்வுகிறார்

வாய்க்காலிலே வெள்ளம்
வாத்து இரண்டும் குள்ளம்
மூக்கிலே கறுப்பு
முதுகு கொஞ்சம் பழுப்பு

வண்ணத் தேரென நடந்து செல்லும் காட்டுக் கோழியார்

சினிமாப் பாடலில் பிரபல்யமாக இருந்த பாடல்கள் சில
‘கொக்கு பற பற
கோழி பற பற
குயிலே பற பற….”

“சின்னக் குயில் பாடும் பாட்டுக் கேட்குதா குக்கு குக்கு கூ… கூ…”

பழைய பாடல் ஒன்று
“சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து…”

தனிமையிலே இனிமை காணும் கறுத்தச் செட்டையார்

இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்…… 

இது எங்க வீட்டுச் சின்னு மயில்….

விழாவில் மயிலாட்டம் போடுகிறாள்.

மின்னேரியா வனவிலங்கு சரணாலய காட்சிகள் கொண்ட எனது ஏனைய பதிவுகள்.மின்னேரியா தேசிய வனத்தில் நாம்.

யானைகள் மத்தியில் நாம் …

யானைச் சவாரியும் ‘அலியாக் கடே யானை’ யும்

மாதேவி

>காட்டைவிட்டு வெளியேற மனமின்றி மெதுவே வெளியே வந்தோம். சிங்காரப் பட்டு உடுத்தி எழிலாய் ராஜா நின்றார்.  பட்டுக் குடை, ஆலவட்டம் வெண்சாமரம் மட்டும் குறைந்திருந்தது. எல்லோரும் அவரைநோக்கி ஒரே ஓட்டமாய் சென்றோம்.

எழிலாய் உடுத்திய ராஜா

அவர் மேலே ஏறுவதற்கு ஓர் இடத்தில் மரத்தாலான ஏணிப்படிகள் கட்டி வைத்திருந்தார்கள். படிகளின் மேல் ஏறிச்சென்று இவர் மேலிருக்கும் கூட்டில் அமர்ந்து சுற்றுலா வரலாம்.

இருபுறமும் அடர்ந்த மரங்கள் வளர்ந்து நிழல் தரும் பாதையால் இனிய பயணம் செல்லலாம். சலசலத்து ஓடும் ஆற்றையும். தண்ணீர் தெறிக்கக் கடந்து சென்று சுற்றிலாகவமாகக் காட்டி வருவார்.

தோப்புகளுடான குறும் பாதையில்

பிள்ளைகள் ராஜாவில் ஏறி அமர்ந்து மகிழ்ச்சியாய் சென்றனர். நாங்கள் அவரை அடி ஒற்றிச்  சென்று வந்தோம். எமக்கு நடைப் பயிற்சியுடன் புதிய அனுபவமாகவும் இருந்தது.

வழியே அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகளும் விரிந்த தோப்புகளும் இருந்தன. தோப்புகளில் தென்னை பலா இலைகளை வெட்டிக் குவித்து இவருக்கு உணவாக வைத்திருப்பதைக் கண்டோம்.

வழியில் முயல், கிளி, குருவிகள், கோழி வளர்ப்பு பாம் ஒன்றும் இருந்தது. பாம் வேலியில் உள்ள கொடியின் கொத்துப்பூவில் தேனருந்தும் வண்ணத்துப் பூச்சியார்கள், அழகான செட்டை அடித்துத் திரிந்தனர். ஒருவர் அகப்பட்டார்.

தேனருந்தும் வண்ணத்துப் பூச்சியார்

உலாச் செல்லும் பிள்ளைகளை பின் தொடர்ந்து சென்றோம். எதிரில் இன்னொரு பட்டு உடுத்திய ராஜாவில் வெளிநாட்டு இளம் ஜோடி உலாச்சென்று திரும்பிக் கொண்டிருந்தார்கள். அதனையும் கண்டு கழித்தோம்.

சவாரிக்கு ஏறும் ஏணிப்படிகளுக்கு அருகே

பட்டுராஜாவுடன் நாங்கள் கிளிக்கிய படம்..

ராஜாவைக் கெடுக்க வேண்டாம் என்று எங்களை  ஹா… ஹா வெட்டிவிட்டேன்.

ராஜாவுக்குக் கொடுத்த வரவேற்பு தனக்கு இல்லையா என ஜீனியர் ஹோர்லிக்ஸ் குடித்து வளரும் எங்கள் வீட்டுப் பஞ்சுக் குட்டியார் நானே பெரியவன் என சேர்க்கஸ் போட்டுக் காட்டுகிறார்.

பஞ்சுக் குட்டி யானையார்

உண்மையில் பெரியவர் அமைதியாகச் சிரித்துக் கொண்டு இருக்கிறார்.

பெரியவர் மிகவும் பிரபல்யமானவர். நீண்ட காலமாக சிம்மாசனத்தில் வீற்றிருந்தவர். எல்லோர் வாயிலும் புகழ்ந்து அழைக்கப்பட்டு வந்தவர். தன்னடக்கமாக நிற்கிறார்.

அவரின் பரம்பரை வரலாறு மிகவும் பிரபலமான ஒரு அழகிய நகரத்தில் நடுநாயமாக இருந்த மார்க்கற் கடையில் ஒய்யாரமாக முன்னே இருந்து வருபவர்கள் அனைவரையும் Welcome கூறி வரவேற்றவர்.

அவரின் பெயராலேயே கடைப் பெயரும் அழைக்கப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் அவரின் புகழை. “அலியாக் கடே” என அழைக்கப்பட்டது. அலியா என்றால் யானை. கடே என்றால் கடை. “யானைக் கடை” என்றே அழைத்தனர் மக்கள். வயது 90 + வருடங்கள்.

“அலியாக் கடே” யானை

கடையில் வீற்றிருந்தவர் 70-75 வயதில் ஓய்வு பெற்று எங்கள் வீட்டில் குடி புகுந்தார். முன்பு மாதந்தோறும் மாதேவி கையால் முழுகாட்டப்பட்டு ஒளி வீசியவர் பிரிந்த சோகத்தில் இப்படி ஆகிவிட்டார்.

தற்போது அண்ணா வீட்டுப் பறனில் வாழ்க்கை.

ஊர் சென்ற போது வெளியே அழைத்து கொட்டகையில் கட்டிவிட்டேன்.

மாதேவி

>

இந்த மின்னேரிய வன சரணாலயத்தில் 24 வகையான பாலூட்டி இனங்கள் வாழ்வதாகச் சொல்கிறார்கள். அதில் மிக முக்கியமானவர் உருவத்தில் மிகப் பெரியவரான யானையார்தான்.

மொத்தம் 200 வரையான எண்ணிக்கையில் இந்தச் சரணாலயத்தில் வாழ்கிறார்களாம்.

சிறுத்தைகளும் காணப்படுகின்றனவாம். ஆனால் எங்கள் கண்ணில் படாமல் ஒளிந்து கொண்டார்கள் போலும்.

தான் கண் விழித்திருக்கும் எம் கண்ணில் படாத சிறுத்தை

இவ்வனம் வனபரிபாலன இலாகாவின் (Department of wild life Consevation) கீழ் இயங்குகிறது. 

  அதே போல கரடிகளும் உள்ளனவாம். Sri Lankan Sloth Bear என்பார்கள். சிங்களத்தில் வலகா. மேலே உள்ள புகைப்படம் தமிழ் விக்கிபீடியாவில் சுட்டது.

முதலைகளும் தாராளமாக உலவுகின்றனவாம். நல்ல காலம் ஜீப்பிலிருந்து கீழே இறங்கி கீழே மின்னேரியாக் குளத்துள் கால் வைக்க இடம் தராததால் 
தப்பித்தோம்.

இலங்கையில் 400க்கு மேற்பட்ட பறவையினங்கள் வாழ்கின்றனவாம். அவற்றில் 160 இந்த வனத்தில் காணப்படுகின்றன என்ற தகவலும் வனபரிபாலன இலாகாவின் தகவலாகும்.

எல்லோருக்கும் பிடித்தமான யானையார் அனேகம் இருப்பதால் அவரைப் பற்றி சற்றுப் பார்த்துவிட்டுச் செல்வோம்.

யானை இனத்தில் எஞ்சியுள்ளது 3 இனங்கள் மட்டுமே. ஆபிரிக்க புதர்வெளி யானைகள் ஒரு வகை. ஆபிரிக்கக் காட்டு யானைகள் இரண்டாவது வகை. ஆசிய யானைகள் மூன்றாவது வகை.

ஆசிய யானைகள் இலங்கை இந்தியா, இந்தோனசியா போன்ற நாடுகளில் காணப்படுகின்றன. இவை ஆபிரிக்க யானைகளை விட சிறிய காதுகளை உடையன.  ஆசிய யானைகளுக்கு காதுகள் வெளிப் புறம் மடிந்திருக்கும். ஆபிரிக்க யானைகளுக்கு காதுகள் உட்புறம் சுருண்டு இருக்கும்.

பாலூட்டி வகையைச் சேர்ந்த தாவர உண்ணி விலங்காகும். ஒரு நாளுக்கு 150 – 170 கிலோ உணவை உட்கொள்ளும். விரும்பிய உணவு கரும்பும் மூங்கிலுமாகும். நிலத்தில் வாழும் மிருகங்களில் உருவத்தில் பெரியது இதுதான். காட்டு ராஜா சிங்கம் புலி போன்ற வலிமையான மிருகங்கள் கூட நெருங்க முடியாத பலம் இதற்கு உண்டு.

6.6 – 11.8 அடி வரை உயரமுடையது. எடை 3000-5000 கிலோ வரை இருக்கும். மனிதர்களைத் தவிர்த்து நீண்ட நாள் வாழக் கூடியது இதுவாகும். 70 ஆண்டுகள் வரை வாழக் கூடியது.

ஆண் யானையை களிறு என்பர். பெண் யானை பிடி எனப்படும். யானையின் குட்டியை குட்டி யானை என்றே அழைப்பர்.

சினைக் காலம் 22 மாதங்கள். குட்டி 90லிருந்து 115 கிலோ வரை எடையுள்ளது. வளர்ந்த ஆசிய ஆண் யானைகளுக்கு தந்தங்கள் உண்டு. ஆபிரிக்க யானையில் இரு பாலாருக்கும் தந்தங்கள் இருக்கும். தந்தம் 3 மீற்றர் வரை வளர்ந்திருக்கும்.

மிகச் சிறந்த கேட்கும் திறன் இதற்கு உண்டு. மிகுந்த புத்திக் கூர்மையுடையது.

தோல் 3-4 செமீ தடிப்புள்ளதாக இருக்கும்.

வெப்பதிலிருந்து காப்பதற்காக உடல் முழுவதும் மண்ணை அல்லது சேற்றைப் பூசிக் கொள்ளுமாம்.

யானையின் சத்தம் பிளிறல் எனப்படும்.

வல்விலங்கு, கைமா, எறும்பி, சிந்துரம், புகர்முகம், வாரணம், போதகம், மாதங்கம், வேழம், கரி, கயம், களிறு. முதகயம், இபம் என்றெல்லாம் எமது தமிழில் இவரை அழைத்திருக்கிறார்கள்.

முதலில் பார்த்தவர் முன்காலை ஆட்டி ஆட்டி புல்லை துதிக்கையால்  சுழற்றிப் பிடுங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

புற்களைச் சுருட்டியெடுத்து….

அவரை அருகே சென்று பார்த்த போது அவர் எம்மைக் கண்டு மிரளவே இல்லை. தன் வேலையில் கருத்தாக இருந்தார்.

இயற்கை சூழலில் உல்லாசமாய் திரியும் அவரை மிக அருகே சென்று பார்த்தது புதிய அனுபவத்தையும் சொல்ல முடியாத மகிழ்வையும் கொடுத்தது.

அவரை நன்கு பார்த்து இரசித்துவிட்டு அப்பால் திரும்பினோம்.

சிப்பாயாக ஒருத்தர் நின்று எம்மைக் கண்டு விட்டு சல்யூட் அடித்துக் கொண்டார்.

சல்லூட்

மோகனும் வாகனத்தை அவர்அருகே செலுத்தினார். இருவருக்கும் கைகால் புரியாத மகிழ்ச்சி.
வேறேன்ன நெற்றில் வரப்போகின்றோம் என்றுதான்.

அப்புறம் மண்குளியல் செய்து காட்டினார். மண்மழை பொழிந்ததைக் கண்டோம். மிகவும் அருமையாய் இருந்தது. இவருக்கு டபுள் டாட்டா…

இடையே கண்டவர்கள் பறவைகள் விலங்கினங்கள் இவர்கள் உங்களுக்கு

ஹலோ சொல்ல அடுத்தபதிவில் வருவார்கள்…

சென்று கொண்டிருந்த வண்டியை காட்டின் உட்பகுதியை நோக்கிச் செலுத்தினார் மோகன். நெருங்கிய காட்டு மரங்களின் கொப்புகள் தலையை முட்டி வந்தன.

அவர்ந்த வனத்தில் குறுகிய பாதை

பயத்தில் தலையை வளைத்துக் கொண்டோம்.
சில பக்கப்பாட்டில் கைகளிலும் முதுகிலும் இடித்தன.

அத்துடன் புதிய சத்தமும் கேட்கத்தொடங்கியது கிலியையும் தந்தது.
கரடியாய் இருக்குமோ… ஒருவரும் பேசவே இல்லை.
சத்தம் தொடர்ந்தது எமது வாகனத்துக்கு அருகாமையில்.

ஹா..ஹா.. நிலத்தில் கிடந்த பட்ட தடிகள் ஜூப்பில் இழுபட்டுவந்த சத்தம் தான் அது என்று தெரிந்துகோண்டோம்.

சென்றுகொண்டிருந்த பாதை சற்று மரங்களற்ற வெளியை அடைந்தது.

ஆகா ஆச்சரியம்!

இத்தனை கால்களா இந்த யானையாருக்கு?

இவருக்கு எத்தனை கால்கள். நீங்களே பார்த்துச் சொல்லுங்கள்.

எம்மைக் கண்டதும் அவருக்கு கால்கள் பலவாயின. அம்மா கையால் சிக்னல் கொடுத்துவிட்டார்.

“குழந்தைகளே மனிதப் பிசாசுகள் வருகுதுகள்” ஒழிந்துகொள்ளுங்கள்.
அவர்களும் உசாராகி தாயுடன் ஒட்டிக்கொண்டனர். வாகனத்தை முன்னே செலுத்தி கண்டுகொண்டேன்… கண்டுகொண்டேன்… பாடினோம்.

சிறுசுக்கு சிரித்த முகம். அள்ளி அணைக்கலாம்போல் இருந்தது. சிறிது நேரத்தில் தாயைவிட்டு சற்று ஓடி கையை வீசி வீசி ஆட்டி தாம்… தோம் என ஓடினார்.

நான் ஒருத்தி எனக்கு இருவர்.

எங்கட சிறிசுகளும் நல்லாச் சிரிச்சிதுகள்.   

அம்மா பிள்ளைகளாகச் சேர்ந்து அழகிய ஊர்கோலம் புறப்பட்டார்கள்.

நாங்களும் அவர்களை விட்டு விலகி ஓரமாகப் பயணப்பட்டோம்.

திரும்பி வரும் வழியில் நாங்கள் ஒரு சிறிய ஓடையைக் கடக்க வேண்டியிருந்தது.

கடக்க முற்பட்டபோது மறுகரையில் அடர்ந்த மரங்களின் இடையே இருந்து….

மிகவும் ஆவேசமாக ….

ஆவேசமாக எம்மை நோக்கி..

யார் அடித்தார்? … ஏன் இந்த ஆர்ப்பாட்டம்!
 
வீட்டுக்காரி கொண்டைப் பின்னால் காதில் குத்திவிட்டாவா?

வேகமாக எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
எமக்குச் சற்றுப் பயமாகவும் இருந்தது.

வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தார்

 மோகனும் உசாராகவே இருந்து கொண்டார்.

ஓடைக்கு நடுவே நாம் செல்ல இருக்கும் பாதையால் இறங்கி வந்தால் நாம் பின்னோக்கி வாகனத்தை எடுக்க வேண்டிய கட்டாயம். எல்லோரும் மூச்சை அடக்கி ஒரு முகமாக அவரை உற்று நோக்கியபடி இருந்தோம்.

நல்லகாலம் நம்முடன் முட்டாமல் விறுவிறுவென மேல் பாதையால் சென்று கொண்டே இருந்தார். நாங்கள் ஓடையைக் கடந்து அவர் என்ன செய்யப் போகிறார் எனப் பார்க்கப் பின்தொடரந்து சென்றோம்.

ஓரளவு தூரம்  காதை விசிறிக் கொண்டு விரைந்து சென்றவர் அடர்ந்த வீடொன்றில் ஓடி மறைந்தார்.

மறைந்த காட்டு வீடு கீழே.

காடு அவர்களது வீடு

க்ளிக்கிக் கொண்டோம். மனைவியிடம் போட்டுக் கொடுக்கத்தான்.

-: மாதேவி :-

>இலங்கை சிறிய தீவாக இருந்தபோதிலும் மலைகள், நீர்வீழ்ச்சிகள், நதிகள், காடுகள், சரணாலயங்கள், அழகான கடற்கரைகள் என இயற்கை வளங்கள் அள்ளிக் கொட்டிக் கொண்டிருக்கின்றன.

நீரும் வனமும்

மகாசேனனால் கட்டப்பட்ட மின்னேரியா குளம் 4670 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட கடல் போன்ற பெரும் குளம் இது.

மகாசேன மன்னன்

 மிகவும் கடின உழைப்பின் மூலமே இது கட்டப்பட்டிருக்கும் எனப் பார்த்த மாத்திரத்தில் தெரிகிறது.

இதனைக் கட்டி முடித்தபடியால் இவனுக்கு மின்னேரியாக் கடவுள் என்ற பெயரும் கிடைத்தது.

தூரத்தில் வெண் புள்ளிகளாக பறவைகள்

இதைத் தவிர மகாசேனன் ஏறத்தாள 16 குளங்களைக் கட்டுவித்து நீர்ப்பாசனத் துறைக்கு வித்திட்டுள்ளான்.

மின்னேரியாக் காடு, நீர் எனச் சூழல் இனிதாக அமைந்ததால் இயற்கையுடன் மிருகங்கள் வாழ ஏற்ற இடமாக அமைந்துவிட்டது. காடும் பசுமையாக இருக்கிறது.

காட்டுடனான எமது நான்கு ஐந்து மணி நேர வாழ்க்கைக்காக இரவுத் தூக்கத்தைக் கலைத்து எமது பிரயாணத்தை ஆரம்பித்தோம். கொழும்பிலிருந்து 4 மணிநேரப் பணயத்தில் ஹபரணையை அடைந்தோம். அதிகாலை 5 மணி அளவில்.

காட்டிற்குள் செல்வதற்கு திறந்த ஜீப்பொன்றை அமர்த்திக் கொண்டோம். உயர்ந்த ஜீப்பில் நாலுகால் மனிதர்களாகப் பாய்ந்து ஏறப் பழகிக் கொண்டோம்.

காட்டில் யானை ஜீப்பில் மனிதர்கள்

இனிய அதிகாலைப் பொழுதில் இதமாக குளிர் காற்று எம்மைத் தழுவிச் செல்ல ஜீப்பும் வேகத்துடன் பயணித்தது.

மேலே உள்ள இரும்பு பாறில் (bar) கைகளைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டோம்.

வாசலில் மின்னேரிய வனம் என்ற போர்ட்டுடன் அழகிய காட்டின் ஆரம்பமாக உயர்ந்த நெருங்கிய சோலைகள் தென்பட்டது.

உள்ளே சென்று பதிந்து ரிக்கெற் பெற்றுக் கொண்டோம்.ஒருவருக்கு எண்பது ரூபாவும் ஜீப்புக்கும் கமராவுக்கும் தனித்தனியாகப் கட்டிக் கொண்டோம்.

காட்டின் ஊடான பயணம் ஆரம்பமானது.

காட்டின் ஆரம்பம்

இருபுறமும் மரங்கள் நெருங்கி அமைந்திருக்க நடுவே குறுகிய மண்பாதை தொடர்ந்து செல்கிறது. ஓரிரு மைல்கள் சென்றதும் நெருங்கிய அடர்ந்த காடு தொடங்கியது. ஜீப் விரைந்து கொண்டிருந்தது.

நீலவானில் பறவைகள் சுதந்திரமாக கீக் கீக் கீதமிசைத்துச் சிறகடித்தன.

அதோ அந்தப் பறவை போல…

சடுதியில் ஒரு பக்கமாக அழகிய இந்திய தேசியப் பறவைகள் “Wait Wait” எனக் கத்தி வாகனத்தை நிறுத்திக் கொண்டோம்.

கிளிக்கியவர் கீழே. ‘கொற கொற’ எனக் கேவிக் கொண்டே விரைந்து ஒளிந்தன.

மறு பக்கம் திரும்பினால் தூரத்தில் யானை.

உள்ளே நிறையப் பார்க்கலாம் எனச் சொல்லி வழிகாட்டி அழைத்துச் சென்றார். விரைந்த வாகனத்தை திடீர் பிறேக் போட்டு காட்டினூடே காட்டினார்.

இலைகளை வளைத்து உண்டு கொண்டிருந்த அழகிய புள்ளி மான் கூட்டங்கள்.

பார்க்காத மான்

ஆ! என நாம் ரசிக்கவும் ஒரு நொடியில் விரைந்து காட்டினுள்ளே மறைந்தன. கிளிக்க முடியவில்லை.

இடையே நமது தோழர்கள் தாவி ஓடிக் கொண்டிருந்தார்கள்.

காட்டுப் பயணம் தொடரும்.

மாதேவி

Advertisements