You are currently browsing the category archive for the ‘யாழ்ப்பாணப் பக்குவம்’ category.

‘பார்த்தால் பசப்புக்காரி கடித்தால் கசப்புக்காரி’ அவள்தான் இவள்.

Cucurbitaceae  குடும்பத்தைச் சார்ந்தது விஞ்ஞானப் பெயர் Momordica charantia என்பதாகும். ஆசியா ஆபிரிக்கா, கரீபியன் தேசங்களில் வாழும் தாவரம். தாயகம் தெரியவில்லை என்கிறார்கள்.

இவற்றில் பல இனங்கள் உள்ளன. வடிவங்களும் பலவாகும். அதன் கசப்புத் தன்மையும் இனத்திற்கு இனம் வேறுபடும்.

பச்சை, வெளிர் பச்சை, முள்ளுப் பாகற்காய், கரும் பச்சை நிறத்தை உடைய குருவித்தலைப் பாகற்காய். பெரிதாக நீளமாக இருப்பது கொம்புப் பாகற்காய்.

பச்சையாக இருக்கும் பாகற்காய் பழுக்கும்போது செந்நிறமாக மாறுகிறது. அத்துடன் கசப்பும் கூடுகின்றது.

ஓர்க்கிட் பூவல்ல! பாகற்காய் பழமாக..

மிகவும் சிறிய ஒருவகை மேல்புறம் தும்புகள் காணப்படும் சிங்களத்தில் ‘தும்பக் கரவல’ என்கிறார்கள். இது கசப்புத்தன்மை இல்லாதது.


சீனவகை பாவற்காய் சற்று வெளிர் பச்சை நிறமுடையது. 30-40 செமி நீளமானது.  

பாவற்காய் ஓர் கொடித் தாவரம். நிலத்திணை வகையைச் சார்ந்தது. மஞ்சள்நிறப் பூக்கள் காணப்படும். இதன் பூக்களில் ஆண் பூ, பெண் பூ என வித்தியாசம் இருக்கிறது.

 எங்கவீட்டு பூச்சாடியில் மலர்ந்த பாகல்கொடி

பாகல்கொடி என அழைப்பார்கள். புடோல், வெள்ளரி, தர்ப்பூசணி, பூசணிக்காய் வகைகளைச் சார்ந்தது.

ஆங்கிலத்தில் bitter melon,  bitter gourd, bitter squash, தமிழில் பாகற்காய். சிங்களத்தில் கரவல.

100 கிராமில் காபோகைதரேற் 4.32 கிராம், சீனி 1.95 கிராம், நார்சத்து 2.0 கிராம், நீர் 93.96 கிராம், கொழுப்பு 0.18 கிராம், பொற்றாசியம் 319 மை.கி, பொஸ்பரஸ் 36 மை.கி,

யூஸ், ரீ, தயிர் சலட், சப்ஜி ஊறுகாய், சிப்ஸ் குழம்பு, வறுவல், சூப் எனப் பலவாறு தயாராகின்றன.

வட இந்திய சமையல்களில்

மசாலாக்களை ஸ்ரவ் செய்து பொரித்து எடுப்பார்கள்.

தென் இந்திய சமையல்களில்

துவரன், தீயல், பிட்லா, பொடிமாஸ், ரசவாங்கி. புளிக் குழம்பு, வத்தல் குழம்பு என இன்னும் பலவகை.

இலங்கைச் சமையலில்

காரக் குழம்பு, பால்க் கறி, சிப்ஸ், சம்பல், தயிர் சலட், பொரித்த குழம்பு, புளிக் குழம்பு, வத்தல் குழம்பு, பாவற்காய் முட்டை வறை, பாவற்காய் முட்டை ஸ்ரவ், கருவாட்டுப் பாகற்காய் எனப் பலவாறு சுவைக்கும்.

பாகிஸ்தான் சமையலில்

காயை அவித்து எடுத்து அரைத்து அவித்த இறைச்சியை ஸ்டவ் செய்துகொள்கிறார்கள்.

மருத்துவப் பயன்பாடு 

ஆசியா, ஆபிரிக்க நாடுகளில் பழைய காலம் தொட்டு மருத்துக்காகப் பயன் படுத்தி இருக்கின்றார்கள்.

 • நீரிழிவு நோயளர்களுக்கு மிகவும் உகந்தது. இரத்ததில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கும். 
 • பாவற்காய் டயபற் ரீ கிடைக்கின்றது. 
 • வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும். 
 • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது. 
 • மலச்சிக்கலைத் தீர்க்கும். 
 • பாகற்காயின் இலையும் மருத்துவப் பயன் உடையது. 
 • சாறு எடுத்து பலவித நோய்களுக்கும் பயன்படுத்துகிறார்கள்.

அலம்பல் வேலியில்லையாம்! பல்கணி சுவரில் படர்கிறார்.

உடல் நலத்துக்கு

கசப்புத் தன்மை அதிகமாக இருப்பதால் பலரும் உண்ண விரும்புவதில்லை. பெயரைக்கேட்டாலே ஓட்டம் எடுப்பர்.

உடல் நலத்திற்கு வேண்டியது என்பதால் உண்பது அவசியம்.
தேங்காய் நீர், பலாக்கொட்டை, தக்காளிப் பழம், முட்டை, கருவாடு, சேர்த்துச் செய்தால் கசப்புத்தன்மை தெரியாமல் பலவித சமையல்கள் செய்ய முடியும்.

பாவற்காய் பலாக்கொட்டை பால்கறி
 
வீட்டில் காய்க்கவில்லை. சமையலுக்கு சட்டிக்குள் போக காத்திருக்கிறார்

தேவையானவை

பாகற்காய் – 1
பலாக்கொட்டை – 5 – 6
சின்ன வெங்காயம் – 10
பச்சை மிளகாய் – 2
கருவேற்பிலை சிறிதளவு
தேசிப்புளி- 1 ரீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தேங்காய் நீர் – ½ டம்ளர்
தேங்காய்ப் பால் – 2 டேபிள் ஸ்பூன்

தாளிக்க தேவையானவை

சின்ன வெங்காயம் – 3
செத்தல்மிளகாய் – 1
கடுகு, உழுத்தம் பருப்பு, கருவேற்பிலை சிறிதளவு
ஓயில் – 2 ரீ ஸ்பூன்

பலாக்கொட்டை மல்லித்தழைத் தளுவலுடன் பாகற்காய் பாற்கறி.

செய்முறை

 • பாகற்காயை  3 அங்குல நீளமாகவெட்டி, உட்பகுதியை நீக்கி கழுவி எடுக்கவும். துண்டங்களை நீள் பக்கமாக மெல்லியதாக வெட்டிக் கொள்ளுங்கள்.
 • பலாக்கொட்டையை தோல் நீக்கி கழுவி எடுங்கள். 
 • மேல்தோலை நீக்கி விடுங்கள். 
 • சிறிய நீள் துண்டுகளாக வெட்டுங்கள். 
 • வெங்காயம் மிளகாயை நீளமாக வெட்டிக் கொள்ளுங்கள். 
 • காய்களைப் பாத்திரத்தில் போட்டு, உப்பு, தேங்காய் நீர் விட்டு, கருவேற்பிலை சேர்த்து மூடி போட்டு, 5-7 நிமிடம் அவிய விடுங்கள். 
 • திறந்து பிரட்டிக் கொள்ளுங்கள். 
 • நீர் வற்றிய பின் தேங்காய்ப்பால் விட்டுக் கிளறி இறக்கி வையுங்கள்.

ஓயிலில் தாளிதப் பொருட்களை தாளித்து சமைத்த பாகற்காயைக் கொட்டி நன்கு ஓரிரு நிமிடங்கள் கிளறி இறக்குங்கள். தேசிப்புளி கலந்து எடுத்து வையுங்கள்.

‘ கசப்பும் இனிப்பும் சேர்ந்த பசப்புக்காரி’ சாப்பிடத் தயாராகிவிடுவாள்.

மேசையில் சாப்பிடத் தயாராக இருக்கிறது

குறிப்பு

தேங்காய் நீர் சேர்ப்பதால் கசப்புத்தன்மை குறைந்துவிடும்.
மேலும் சிறுவர்களுக்கு நன்கு கசப்பைக் குறைக்க விரும்பினால் ½ ரீ ஸ்பூன் சீனியை இறக்கும்போது கலந்துவிடுங்கள்.
( வெல்லம் சேர்த்தால் கறியின் நிறம் மாறிவிடும் )

பலாக்கொட்டை சேர்த்த மற்றொரு சமையல் பயத்தங்காய் பலாக் கொட்டைப் பிரட்டல்

மாதேவி
Advertisements

>யாழ்ப்பாண உணவுப் பொருட்கள் மிகவும் பிரபலம் பெற்றவை.
மிகவும் இனிப்பான கறுத்தக் கொழும்பு மாம்பழத்தின் சுவை சொல்லும் தரமன்று. தென்பகுதி மாம்பழம் வெறும் பச்சை நிறமாய் இருபது முப்பது ரூபாவிற்கு விற்கும். வாங்கி வாயில் வைத்தால் ஒன்றில் பச்சைத் தண்ணீர், அல்லது வாய் புளித்துப் போய்விடும். ஏனடா வாங்கினோம் என்றாகும்.

பென்னம் பெரிய குலைகளாய் விளையும் திண்ணைவேலி இரதை வாழைப்பழம் ஒரு வேளை உணவுக்கு ஒரு பழமே போதுமானதாய் இருக்கும்.

இவற்றுடன் பலாப்பழமும், யாழ் முருங்கைக்காயும் சேர்ந்துகொள்ளும். இவையெல்லாம் வெளியூர்களில் வசிக்கும்போது நினைவில் தோன்றி மறைவதில் வியப்பில்லை.

இது போன்றே யாழ் மிளகாய்த் தூளும். தரத்தில் உயரிடம் பிடித்தது. மிகவும் இலகுவான சமையல் முறைக்கு ஏற்ற தயாரிப்பு. வாசனையும் மிக்கது. பக்கற்றுகளில் அடைக்கப்பட்டு ஏற்றுமதியாகிறது. உலகெங்கும் இலங்கைத் தமிழர் வாழும் இடங்களில் எல்லாம் உணவில் விரும்பிப் பயன்படுத்தப்படுகிறது.

மிளகாய்த் தூள் என்று இலகுவாக வாயினால் சொல்லி விடலாம்.
பைக்கற்றை உடைத்து டப்பாவில் போட்டு வைத்திருந்தால் அள்ளிக் கறியில் போட்டுவிட்டால் சரியாகிவிடும்.

இதன் தயாரிப்பில் உள்ள சிரமங்கள் எத்தனை?

குறைந்தது நாலு ஐந்து நாட்கள் எடுக்கும். யாழ்ப்பாணப் பெண்கள் இந்த விடயத்தில் மிகுந்த பொறுமைசாலிகள்தான்.

முதலில் கடைக்குச் சென்று நல்ல சிவத்த புதுச் செத்தல் மிளகாய் தேடி வாங்க வேண்டும். அத்துடன் அதற்கான மசாலாச்சரக்குப் பொருட்கள் சேகரிக்க வேண்டும்.


பின் வீட்டிற்குக் கொண்டு வந்து சூரிய பகவானை வேண்டி
“மழையைத் தராதே மழையைத் தராதே’
‘நல்ல வெயிலைத் தா”
எனப் பாடி
இரு கரம் கூப்பி வணங்குங்கள்.

செத்தல் மிளகாயை எடுத்து கஞ்சல் குப்பை எல்லாம் பொறுக்கி நீக்கி,
நாலு ஐந்து தடவை இருமித் தும்மி முடித்து விடுங்கள்.

நீரில் கழுவி வட்டியில் போட்டு வடிய விட்டு வெயிலில் உலர்த்துங்கள்.


அவ்வாறே மசாலாப் பொருட்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாகக் கழுவி காயவிடுங்கள்.

கறிவேற்பிலையையும் வெயிலில் காயவிடுங்கள்.


மூன்று நான்கு நாட்கள் வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

பகலில் மழை வந்தால்
ஓடிச்சென்று உள்ளே எடுத்து வைத்து
பெய்த மழையை திட்டித் தீருங்கள்.
மழைமுடிந்து சூரியன் வந்தால்
வெளியே எடுத்துவையுங்கள்.

மறுநாள் சூரியன் வருமா என ஆகாயத்தையே பார்த்துப் பார்த்து எடுத்துக் காயவிடுங்கள்.

அப்பாடா ஒருவாறு மிளகாய் மசாலாக்கள் காய்ந்து விட்டது.
அடுத்தது என்ன?
செத்தல் மிளகாயை எடுத்து
ஒன்றொன்றாய்க் காம்பை ஒடித்து
அதை மூன்று நான்கு துண்டுகளாய் வெட்டி எடுங்கள்.

தும்மி, இருமி, கண்ணீர் சிந்தி
முகம் கை எல்லாம் எரிவு வர
ஓடிச் சென்று சோப் போட்டு கை முகம் கழுவுங்கள்.

இது ஒரு நாளில் முடியாது. நறுக்கி எடுக்க இரண்டு நாள் எடுக்கும்.

இடுப்பும் பிடிக்கத் தொடங்கிவிட்டது. அடிக்கடி இடுப்பையும் தடவிக் கொள்ளுங்கள். ஒருவாறு வெட்டிமுடிந்து விட்டது.

முதல் நாள் இரவு எல்லாப் பொருட்களும் சரியாக இருக்கிறதா என கவனத்தில் கொள்ளுங்கள்.

நாளை சுப முகூர்த்தம் அல்லவா? அதிகாலை மலர்ந்துவிட்டது.

பெரிய தாச்சியைக் கழுவி எடுத்து, அடுப்பில் ஏற்றி விடுங்கள். இனி வறுத்து எடுக்கும் வேலைகள் ஆரம்பம்.

முதலில் மிளகாயைப் போட்டால் கெட்டுவிடும். வீடே பற்றி எரியும். அதனால் முதலில் போட வேண்டியவர் மல்லியார்தான். இவருக்கு சூடு சுரணை குறைவு. நீண்ட நேரம் சூடு ஏற்றினால்தான் கோபம் வந்து உடைவார்.அளவாக அடுப்பைவைத்து நன்கு வறுத்துஎடுங்கள்.


அடுத்து சட்டியில் புகலிடம் மசாலாச் சரக்காருக்குத்தான்.
அவர்களை ஒன்றாகவே போட்டுக் கொள்ளலாம்.
இவர்களுக்கு விரைவில் சூடு ஏறிவிடும்.
பறக்கத் தொடங்கிவிடுவார்கள்.
பதமாய் கிளறினால்தான் உருப்படுவார்.
இல்லாதுவிட்டால் கரித் துண்டுகள்தான்.

பதமாய் வறுத்து எடுங்கள்.
ஒருவாறு அரைவேலை முடிந்துவிட்டது.

இருக்கவே இருக்கு சிகப்பு இராட்சசி. இதை நினைக்கவே பயம் வரும்.

‘நீயா நானா’ பார்த்திடுவோம்.

வெப்பத்தை அளவாய் வைத்து மூன்று நாலு கிளறு கிளறவே இராச்சசிக்கு கோபம் ஏறிவிடும்.

வேலையைக் காட்டத் தொடங்கிவிடுவாள்.

அச்.. அச், கொக்… கொக் மூக்கு வாயெல்லாம் எரிக்கிறாளே.

கண்ணீர்விட ஒருவாறு இறங்கி வருவாள். ‘அடிமைப் பெண்ணானாளே’ எனத் திரும்ப, மிகுதி நாங்கள் இருக்கிறோமே என சிரிப்பார்கள் ஓர் புறம் உள்ளவர்கள்.

“சரி சரி இருங்கடி உங்களுக்கு ஒரு வேட்டு” என்றபடியே
முதல் இராட்சசிகளை கொட்டி உலர்த்திவிட்டு
இவளுகளை எடுத்து சட்டியில் கொட்டவும்
உலர விட்டவர்கள் ஊரையே கூட்டி
அடுத்த வீட்டு கமலா அன்ரியையும்
மேல் வீட்டு அக்காவையும்
குசினி யன்னலுக்கு அழைத்து விடுவார்கள்.

“என்ன உங்கை மிளகாய் வறுகிறியளே” என குசல விசாரிப்புகள் தொடங்கிவிடும்.

“நான் சென்ற மாதந்தான் வறுத்தேன்” என்பாள் ஒருத்தி.
மற்றவளோ “நான் திரிக்க வேணும்” என அழுவாள்.

அதற்கிடையே சட்டியை நாலு தட்டு தட்ட வேண்டும்.
விரைவாக வறுபட்டு வாங்கடி எனச் சபித்தபடியே
சரக்.. சரக்தான்.

இதோ நெருங்கிவிட்டார் வெற்றிக் கம்பத்தை அடைய
ஒரே நிமிடம். ஆ… ஆ வென்று விட்டேனே.
முடிந்தது வேலை.
வெற்றி எனக்குத்தான்.

இவர்கள் எல்லாம் ஆறப் போடப் பட்டுள்ளார்கள். சாதாரண நிலைக்கு வருவதற்கு.

அதற்குள் நானும் வோஷ் எடுத்து மேக் அப் போட்டுவிடுவேனே.

எல்லோருக்கும் சின்னு ரேஸ்டியின் யாழ்ப்பாண மிளகாய்த் தூளின் இடைவேளை.

பிளீஸ் கம்பக் ஆவ்டர் வன் அவர்.

ஆமாம் வந்துவிட்டோம்.

வெல்கம் பக்.

வறுத்த பொருட்கள் யாவும் பெரிய கடுதாசிப் பக்கற்றுக்குள் அடைபடப் போவதைக் காணுங்கள். அடுத்து கிறைன்டிங் மில்லை நோக்கிய பயணம்தான். வெயிட் போட்டுக் கொடுத்து உடனே தருவீர்களா அல்லது சென்றுவிட்டு ஒரு அவரில் வரவா என்ற கேள்விதான்.

கடையெல்லாம் சுற்றிவிட்டுச் சென்று நமது ‘பொக்கஷ’த்தை வாங்கிவர வேண்டும். கையில் கிடைத்ததும் எமது முகத்தில் ஒளிவட்டம் வீசுமே. அதைக் காண கண் கோடியும் வேண்டும். பிறகென்ன மகாராணி நடைதான்.

இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்குத் தாக்குப் பிடிக்குமே என்ற சந்தோசம்தான். அந்த நடையை நீங்களும் வாழ்க்கையில் ஒரு தடவை நடந்துதான் பாருங்களேன்.

வீட்டுக்கு வந்தாயிற்று.

சுளகு எடுத்து கடதாசிப் பேப்பரை விரித்து, கொண்டு வந்த ‘பொக்கிஷத்தை’க் கொட்டி ஆறவிட்டு விட்டு மதியச் சமையலுக்கு தயார் செய்ய வேண்டியதுதான்.

சமையல் முடிய தூளாரும் ஆறியிருப்பார்.
எடுத்து அரிதட்டில் இட்டு
அரித்து இருமித்…தும்மி…
கட்டையைக் கொட்டிவிட்டு
தூளாரை காற்றுப்போகாத பெரியபோத்தல்களில் அடைத்து வைக்க வேண்டியதுதான்.


அடைத்தாயிற்று!

அப்படியே சென்று தயாரிப்பாளர் குளியல் அடித்துவிட்டு வருவதுடன்
முடிவுக்கு வந்துவிடுவார் யாழ்ப்பாண மிளகாய்த் தூளார்.

மீண்டும் மூன்று மாதத்தில் பயணத்தை ஆரம்பிப்பார்.

தயாரிப்புக்கு சேகரித்தவை

செத்தல் மிளகாய் 1 கிலோ
மல்லி 1 கிலோ
பெருஞ்சீரகம் 100 கிராம்
சின்னச் சீரகம் 100 கிராம்
மிளகு 100 கிராம்
வெந்தயம் 50 கிராம்
கறுவா, இறைச்சிச் சரக்கு பைக்கற் சிறியது 1
மஞ்சள் 5-6 பல்லு
கறிவேற்பிலை 1 கொத்து

சிலர் குளம்பு தடிப்பாக வரவேண்டும் என்பதற்காக உழுந்து, அரிசி வறுத்துச் சேர்ப்பார்கள்.

ஆனால் இது நீண்ட நாட்களுக்கு பழுதடையாது இருக்குமா என்பது கேள்விக் குறி.

நீங்கள் எப்போ சேகரிக்கப் போகிறீர்கள்?

மாதேவி

>இன்றைய நாகரீக மாற்றத்தில் பாட்டி காலத்து கிராமத்தின் ‘பக்குவ சமையல் முறைகள்’ அருகி மறைந்து போய்விட்டன.

அங்கொன்றும் இங்கொன்றுமாக அவற்றில் சில நகரங்களில் ஆடிக்கொரு தடவை இடம் பிடிப்பதுண்டு.

கிராமத்து பொருட்களில் சில வகையானவை நகரங்களில் கிடைப்பதும் அருமை. அவ்வாறு கிடைத்தாலும் அநேகருக்கு அவற்றை எவ்வாறு சமைப்பது என்ற விடயமும் கேள்விக் குறியாகவும் இருக்கிறது.

எனவே எமது பாரம்பரிய உணவு முறைகளை மறவாது செய்து வருவது சிறந்தது.

அந்த வகையில் கொல்லை அகத்தியென பாடல்களில் புகழ்ந்து பாடப்பட்ட மரம் இது. கிராமங்களில் பிரசித்து பெற்ற இது வீட்டுக் கொல்லைகளில் பெரும்பாலும் இடம் பிடிக்கும். அகத்தி பூ பூத்தாலும் புறத்தி புறத்தியே என்ற சொல்வழக்கையும் நினைவில் கொள்ளலாம்.

மரம் பூக்கும் காலத்தில் வெண்கத்தி போன்ற பூக்களாய் கொத்துக்களுடன் தொங்கும் அழகோ கொள்ளைதான்.

அழகில் அனைவரையும் கவரும் அகத்தி இலை, பூ என இரண்டுமே சமையலில் முக்கிய இடத்தை வகித்து வருகின்றது.

கூடிய சத்துக்களும் அடங்கியுள்ளது. இரும்புச் சத்து நிறைந்தது. எலும்புகளை வளர்ச்சியடையச் செய்யும் கல்சியமும் அடங்கியுள்ளது. உடலுக்கு சீரான சக்தியையும் கொடுக்கும்.

இவ் வகையில் சிறப்புற்ற அதன் பூவை நாமும் சமைத்து உண்போமே.

சமைப்பதற்கு வேண்டியவை

அகத்திப் பூ – 20-25
உருளைக்கிழங்கு – 1
வெங்காயம் – ½
பச்சை மிளகாய் – 2(காரத்திற்கு ஏற்ப)
மஞ்சள் பொடி – (விரும்பினால்)
உப்பு – தேவையான அளவு
தேசிச் சாறு – சிறிதளவு
முதலாம் தேங்காய்ப்பால் – ¼ கப்
தண்ணிப்பால் – ½ கப்

தாளிக்க

கடுகு – ¼ ரீ ஸ்பூன்
உழுத்தம் பருப்பு – 1 ரீ ஸ்பூன்
வெங்காயம் – ½
கறிவேற்பிலை – சிறிதளவு

வாருங்கள் சமைப்போம்

பூவின் காம்புடன் கூடிய புல்லியை வெட்டி எடுத்து அகற்றி விடுங்கள்.
உள்ளிருக்கும் மகரந்தத்துடன் கூடிய தடித்த தண்டையும் அகற்றிவிடுங்கள். புழு பூச்சி இருந்தால் அப் பூவின் இதழ்களை அகற்றி விடுங்கள்.

நல்ல இதழ்களாக ஒவ்வொன்றாகப் பிரித்து எடுத்து வையுங்கள். வடியில் இட்டு ஓடும் குழாய் நீரில் நன்றாகக் கழுவிக் கொள்ளுங்கள். பின்பு நீரை வடிய வைத்துவிடுங்கள்.

கிழங்கு வெங்காயம் சிறிய துண்டுகளாக வெட்டி வையுங்கள்.

பச்சை மிளகாயை கீறிவிடுங்கள்.

விரும்பினால் பூ இதழ்களை அகலப்பாட்டுக்கு குறுக்காக ஒரு தடவை வெட்டுங்கள். முழு இதழாகவும் செய்து கொள்ளலாம்.

கிழங்கை தண்ணிப் பால் சிறிது உப்புடன் சேர்த்து அவியவிடுங்கள்.

கிழங்கு முக்கால் பாகம் அவிந்ததும் பூ இதழ்கள், வெங்காயம், பச்சை மிளகாய், சிறிது உப்பு சேர்த்து அவியவிடுங்கள். விரைவில் அவிந்துவிடும்.

ஓராம்பால் விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி தேசிச்சாறு விட்டு பிரட்டி விடுங்கள். தாளித்துக் கொட்டி கிளறிவிடுங்கள்.

பூ வாசத்துடன் பூப்பூவாய் கறி தயாராகும். சாப்பாட்டு பிளேட் எடுத்து விட்டீர்களா? சாப்பிட்டுவிட்டு ரிஸல்ட் சொல்லுங்கள்.

———- மாதேவி ———-

>
கத்தரி
வெள்ளையாக
மாறுமா?
மாறும்!
வெள்ளையாக மட்டுமென்ன
செம்மையாக, மஞ்சளாக .. இன்னும் இன்னும்

கத்தரி வாழையுடன் கூட்டிணைந்து
தேங்காய்ப் பாலில் முக்குளித்து,
தேசியுடன் கலக்கும் போது
வாசனை கமழும், வாயூறும்

அக்கம் பக்கமும்
பொட்டுக்குள்ளால்
எட்டிப் பாரக்கும்.

ஊர்க் கத்தரியானால்
ஊரே கூடும்.

சுவைப்போமா?

தேங்காய்ப் பால் கத்தரி

தேவையான பொருட்கள்

1. பிஞ்சுக் கத்தரிக்காய் – 2
2. வாழைக்காய் – 1
3. சின்ன வெங்காயம் – 5,6
4. பச்சை மிளகாய் – 2
5. வெந்தயம் – ½ ரீ ஸ்பூன்
6. தேங்காய்த் துருவல் – ½ கப்
7. மஞ்சள் தூள் விரும்பினால்
8. தேசிப்பழம் – ½
9. கறிவேற்பிலை – 1 இலை
10. உப்பு தேவையான அளவு

தாளிக்க

1. சின்ன வெங்காயம் – 3,4
2. தாளிதக் கலவை – 1 ரீ ஸ்பூன் (கடுகு, உழுத்தம் பருப்பு, சீரகம், சோம்பு,)
3. கறிவேற்பிலை – 1 இலை
4. எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

1 ம் கெட்டிப் பாலை எடுத்து தனியே வைத்துவிடுங்கள். 2ம், 3ம் பாலை ஒரு கோப்பையில் விட்டுக் கொள்ளுங்கள்.

கத்தரிக்காயை முழுதாகக் கழுவி எடுத்து தண்ணீரில் சின்னவிரலளவு நீள் துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.

வாழைக்காயின் தோலை உட் தோலுடன் சீவிக் கழிக்கவும், காயை தண்ணீரில் கத்தரியைப் போல வெட்டிக் கொள்ளுங்கள்.

வெங்காயம் மிளகாயை தனித்தனியே நீளமாக வெட்டிக் வையுங்கள்.
அடுப்பில் வைக்கும் பாத்திரத்தை எடுத்து 2ம், 3ம் பாலை ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

காய்கறிகளை 2-3 தண்ணீரில் கழுவிக் கொண்டு பாத்திரத்தில் போடுங்கள். பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு, மஞ்சள், வெந்தயம் சேர்த்து இறுக்கமான மூடி போட்டு 5-7 நிமிடம் அவிய விடுங்கள்.

திறந்து பிரட்டிவிடுங்கள். மீண்டும் மூடி போட்டு 2 நிமிடம் அவியவிட்டு எடுத்து கிளறி, தண்ணிப்பால் வற்ற, 1ம் பாலை ஊற்றி 1 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி, எலுமிச்சம் சாறு சேர்த்துவிடுங்கள்.

எண்ணெயில் தாளித்துக் கொட்டி கிளறிவிடுங்கள்.
தேங்காய்ப்பால் மணத்துடன் குழந்தைகளும் விரும்பி உண்ணும் கறியாகிவிடும்.

குறிப்பு

வாழைக்காய்க்குப் பதில் உருளைக்கிழங்கு, பலாக்கொட்டை கலந்து கொள்ளலாம்.

அசைவம் உண்போர் கருவாடு சேர்த்துக் கொண்டால் சுவை தரும்.

-: மாதேவி :-

Advertisements